சிறுமியின் விளையாட்டு தனம் கின்னஸ் சாதனையாக மாறியது எப்படி? - ராஞ்சி மக்களை வியக்க வைத்த சிறுமி
சாதனை சிறுமிக்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கு வருகிறார்கள்.

Published : October 12, 2026 at 9:01 AM IST
ராஞ்சி: 11 வயது சிறுமி தனது மூக்கின் மீது ஹூலா ஹூப் வளையத்தை வைத்து ஒரு நிமிடத்தில் 80 முறை சுழற்றி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
'ஹூலா ஹூப்' விளையாட்டில் ஆர்வம்
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சேர்ந்த தம்பதி ராகுல்- கவிதா வசிஷ்தா. இவர்களின் 11 வயது மகள் ஆஷ்வி வசிஷ்தா. இவர், டிஏவி கபில்தேவ் பள்ளியில் (DAV Kapildev School) பயின்று வருகிறார். இவர் தனது சிறு வயதிலேயே 'ஹூலா ஹூப்' வளையத்தை வைத்து விளையாடும் விளையாட்டை தொடங்கியுள்ளார். அதன் பின்னர், தனது மூக்கில் பெரிய அளவிலான 'ஹூலா ஹூப்' வளையம் வைத்து சுழற்றும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். மூக்கின் மீது வளையம் சுழலும்போது மாணவி ஆஷ்வி வசிஷ்தாவுக்கு, தனது உடலை சமநிலையில் வைத்திருப்பதே கடும் சவாலாக இருந்துள்ளது.
சாதனை பட்டியலைத் தொடங்கிய தருணம்
எனினும், பயிற்சியைவிடாத பள்ளி மாணவி ஸ்கேட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் 'இன்லைன் ஸ்கேட்ஸ்' காலணியை அணிந்து தனது முகத்தை வானத்தை நோக்கி பார்த்தபடி மூக்கின் மீது 'ஹூலா ஹூப்' வளையத்தை வைத்து எதிர் கடிகார திசையில் (Anticlockwise) சுமார் 6 நிமிடங்கள் 40 வினாடிகளில் 397 முறை சுழற்றி 'ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்' (Asia Book of Records) இடம் பிடித்து அசத்தினார். அதைத் தொடர்ந்து, ஸ்கேட்ஸ் காலணியை அணிந்து சமநிலையில் இருந்தவாறு 3 நிமிடங்கள் 46 வினாடிகளில் 226 முறை சுழற்றி 'இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்' (India Book of Records) இடம் பிடித்து அசத்தினார்.
மாணவியின் வீட்டில் கொண்டாட்டங்கள்
சாதனையின் தொடர்ச்சியாக, மாணவி ஆஷ்வி வசிஷ்தா தனது மூக்கின் மீது 'ஹூலா ஹூப்' வளையத்தை வைத்து ஒரு நிமிடத்தில் 80 முறை சுழற்றினார். இதனை உலக சாதனையாக அங்கீகரித்த 'கின்னஸ் உலக சாதனை' அமைப்பு, கடந்த அக்.08- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று மாணவிக்கு சாதனைப் படைத்ததற்கான பதக்கமும், சான்றிதழும் அனுப்பியுள்ளது. இதையடுத்து, மாணவி ஆஷ்வி வசிஷ்தாவின் வீட்டில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
கின்னஸ் உலக சாதனை குடும்பத்தினருக்கு அர்ப்பணிப்பு
இது குறித்து மாணவி ஆஷ்வி வசிஷ்தா கூறுகையில், "நான் சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'ஹூலா ஹூப்' பயிற்சியைத் தொடங்கினேன். எதையும் எதிர்பார்க்காமல் 'ஹூலா ஹூப்' பயிற்சியை ரசித்து செய்தேன். அப்போது, எனக்கு சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. 'ஹூலா ஹூப்' பயிற்சியை எனது பெற்றோரும், குடும்பத்தினரும் ஊக்குவித்தனர். உலக சாதனை படைப்பதை இலக்காகக் கொண்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மிகவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன்.
தனது பெற்றோர் ராகுல் மற்றும் கவிதா வசிஷ்தா ஆகியோர் தனக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்தனர். எனது தாத்தா அசோக் சர்மா, இலக்கில் வெற்றியடைய ஊக்கமளித்திருந்தார். எனது கின்னஸ் உலக சாதனையை எனது குடும்பத்திற்கு அர்ப்பணிக்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
வியப்பில் ஆழந்த ராஞ்சி மக்கள்
சிறுமியின் விளையாட்டு தனமாகத் தொடங்கிய பயணம், அவரது வாழ்வில் ஒரு மைக்கல்லாக மாறியுள்ளது. 'கின்னஸ் உலக சாதனை' சான்றிதழ் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைக்க புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
சாதனை சிறுமி ஆஷ்வி வசிஷ்தாவைக் கண்டு ராஞ்சி மக்கள் வியந்ததுடன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அத்துடன், அந்த சிறுமிக்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

