காஞ்சிபுரத்தில் ஏலேல சிங்க விநாயகருக்கு புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்! - vinayagar chaturthi 2024
Published : Sep 7, 2024, 4:03 PM IST
காஞ்சிபுரம் : இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுவது விநாயகர் சதுர்த்தி. இவ்விழா நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அந்தவகையில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் பிரசித்தி பெற்ற 'ஏலேல சிங்க விநாயகர்' கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மூலவரான விநாயகருக்கு புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியான இன்று ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதன்படி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ரூ.10, 20 , 50, 100, 200, 500 ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனையடுத்து சிறப்பு தீபாரதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்து ஏலேல சிங்க விநாயகரை வழிபட்டு சென்றனர்.