கோவையில் ஓணம் பண்டிகை.. ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மகாபலி மன்னர்! - coimbatore onam festival
Published : Sep 13, 2024, 8:02 PM IST
கோயம்புத்தூர்: மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, கோவை - பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று (செப்.13) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓணம் பண்டிகையின் முக்கியமான மன்னராக கருதப்படக்கூடிய மகாபலி மன்னரின் வேடமணிந்த மாணவரை, கல்லூரி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்து ஹெலிகாப்டர் மூலம் கல்லூரிக்கு அழைத்து வந்தனர்.
இதனையடுத்து, கல்லூரியில் பூ கோலமிட்டு மோகினி ஆட்டம், களறி ஆகியவை நடைபெற்ற நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும், இந்நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஓணம் சேலை, வேட்டி சட்டை அணிந்து, செண்டை மேளம், பாடல்களுக்கு உற்சாக நடனமாடி ஓணம் பண்டிகையைக் கொண்டாடினர். தொடர்ந்து, கேரள பாரம்பரிய சிங்காரி மேள வாத்தியங்களுடன் மகாபலி மன்னன் மாணவர்களுடன் நடனமாடினார். மகாபலி மன்னரை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.