நேபாள சுற்றுலா பயணி தவறவிட்ட ஆப்பிள் செல்ஃபோன்.. புதுச்சேரி ஆட்டோ டிரைவர்கள் செய்த நேர்மையான சம்பவம்! - Nepal tourist missed IPhone
Published : Sep 12, 2024, 9:42 PM IST
புதுச்சேரி: சுற்றுலா வந்த நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஆட்டோவில் தவறவிட்ட ஆப்பிள் செல்போனை, ஆட்டோ ஓட்டுநர்கள் அவர் புறப்பட்டுச் சென்ற பேருந்தை விரட்டி சென்று ஒப்படைத்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
புதுச்சேரி செட்டித்தெரு - மிஷின் வீதி சந்திப்பில் ஆட்டோவில் வந்த நேபாளத்தைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி தனது ஆப்பிள் செல்போனை மறந்து ஆட்டோவிலேயே விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், தனது ஆட்டோவில் செல்போன் இருப்பதை கவனித்த ஓட்டுநர், உடனே அந்தப் பயணியை இறக்கிவிட்ட தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். ஆனால், அந்தப் பெண் அங்கில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, விடுதியில் இருந்து அவரது செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு பேசிய ஆட்டோ ஓட்டுநர், உங்களது ஆப்பிள் போன் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு, தான் ஊருக்கு புறப்பட்டுவிட்டதாகவும், பேருந்து முருகா தியேட்டர் சிக்னலை கடந்து சென்று கொண்டிருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆப்பிள் செல்போனை ஒப்படைக்க தான் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, பேருந்து சிவாஜி சிலை பகுதியில் சென்ற நிலையில், பேருந்தை விரட்டி பிடித்த ஓட்டுநர் அந்தப் பெண்ணிடம் அவரது செல்போனை ஒப்படைத்தார். செல்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றார். தற்போது இது குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.