எம்ஜிஆர் கையில் பாஜக கொடி? வைரலாகும் வீடியோ! - MGR DANCE WITH BJP FLAG
🎬 Watch Now: Feature Video


Published : April 19, 2025 at 8:42 PM IST
கோயம்புத்தூர்: தமிழ்நாடு பாஜக தலைவராக, நயினார் நாகேந்திரன் பதவியேற்றுள்ளார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்ற பிறகு முதன் முறையாக இன்று (ஏப்ரல் 19) கோயம்புத்தூர் வருகை தந்தார். அவருக்கு காளப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை கோட்ட பாஜக சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த கலை நிகழ்ச்சிகளில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் எம்ஜிஆர் வேடமணிந்த கலைஞர்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். இதில், எம்ஜிஆர் வேடம் அணிந்த ஒருவர், நயினார் நகேந்திரன் போன்று வேடம் அணிந்த ஒருவரை வரவழைத்து மேடையில் தனக்கு அருகே அமர வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
குறிப்பாக, எம்.ஜி.ஆர் வேடம் அணிந்தவர், "கடவுள் எனும் விவசாயி கண்டெடுத்த தொழிலாளி" என்ற பாடலுக்கு கையில் பாஜக கொடியை ஏந்தி, நடனமாடினார். இதனை, பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகத்துடன் பார்த்து கை தட்டி ரசித்தனர். தற்போது இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.