டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு, மக்கள் பெரிதும் பயன்படுத்தும் சேவையாக யுபிஐ எனப்படும் யுனிஃபைடு பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) இருந்துவருகிறது. இன்று இவைகளின் சேவை முடங்கியதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), தற்போது இந்த பிரச்சினை தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் நாடு முழுவதிலும் உள்ள பல பயனர்களிடத்தில் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியதில், அவர்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். அதில் சிலர் வங்கி சர்வர்கள் வேலை செய்யவில்லை எனவும் வேறு சிலர் யுபிஐ சர்வரில் பிரச்சினை இருப்பதாக மொபைல் திரையில் காட்டப்படுவதாக தெரித்துள்ளனர்.
டிஜிட்டல் தளங்களின் சிக்கல்களை கண்காணிக்கும் டவுன்-டிடெக்டர் (Down Detector), யுபிஐ சேவைகளில் பிரச்சினைகள் எழுந்ததாக காலை 11:30 மணி முதல் பயனர்கள் தெரிவித்து வருவதாக தரவுகளை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த பிரச்சினையை நாடு முழுவதிலும் உள்ள யுபிஐ பயனர்கள் சந்திக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதமும் இதுபோன்ற பிரச்சினையை என்.பி.சி.ஐ சந்தித்தது நினைவுகூரத்தக்கது.
இது தொடர்பாக சமூக வலைத்தள பயனர்களும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். புஷ்பேந்திரா சிங் ராஜ் எனும் எக்ஸ் பயனர், “மற்றுமொரு முறை! யுபிஐ வேலை செய்யவில்லை. நான் இதில் சிக்கிக் கொண்டேன். உணவு ஆர்டர் செய்துவிட்டு பணம் செலுத்த முடியாமல் தவிக்கிறேன். யுபிஐ-யில் பணப் பரிவர்த்தனை செய்ய முற்படுகையில், அது சுற்றிக்கொண்டே இருக்கிறது. தற்போது என் பள்ளிக் காலங்களில் இருந்த நடைமுறையை பின்பற்றும் நேரம் வந்துவிட்டதோ!” என்று தெரிவித்திருக்கிறார்.
Ugh, not again! 🤦♀️ UPI is down, and I'm stuck here like 🧍♀️. Trying to pay for my 🍕, but the app is just spinning. This is so frustrating! 😤 Guess I'll be paying with cash, old-school style. #phonepe #googlepay #mobiquick#UPIDown
— Pushpendra Singh Raj (@Pushpensr) April 12, 2025
இந்த நிலையில், என்.பி.சி.ஐ இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. “தங்களின் சர்வர்கள் தொழில்நுட்ப பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதனால் யுபிஐ பரிவர்த்தனைகளில் சிக்கல்கள் எழுந்துவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் வேலையை பார்த்து வருகிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும்,” என்று பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க |
இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள், யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைப் பயன்படுத்துகின்றனர். இது வேகமாக பணத்தை அனுப்பும் டிஜிட்டல் முறை என்பதால், அவசரத் தேவைகளுக்கு வங்கிக் கிளைகளை நாடாமல், ஒரு பயனரால் பணத்தை எளிதில் மற்றொருவருக்கு அனுப்ப முடியும்.
மேலும், யுபிஐ சேவையின் வாயிலாக பில்கள், ரீசார்ஜ்கள், மாத சந்தா கட்டணங்கள் போன்றவற்றை எளிதில் செலுத்தவும், ரூபே கிரெடிட் கார்டுகளை இதில் இணைத்து சாதாரணமாக நாம் செய்யும் ‘ஸ்கேன் டூ பே’ பணப் பரிமாற்றத்தை செயல்படுத்தவும் முடியும். இதனால், கடைகள், நிறுவனங்கள் என பெரும்பாலான இடங்களில் நாம் யுபிஐ சேவைகளை அனுபவிக்க முடியும். அந்த வகையில், தற்போது இதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினைகளால் பல லட்சம் பயனர்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.