ஹைதராபாத்: டாடா கர்வ் (Tata Curvv) மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்படும், டாடா மோட்டார்ஸ்-இன் புதிய எஸ்யூவி கூப்பே காராக (SUV Coupe Car) உள்ளது. டாடா அறிமுகம் செய்துள்ள இந்த மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜீன் மட்டுமல்லாது, எலக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கார் பிரியர்களின் மத்தியில், டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகளான நெக்ஸான் (Nexon) மற்றும் பஞ்ச் (Punch) கார்களை தொடர்ந்து, டாடா மோட்டார்ஸின் அடுத்த வெற்றிகரமான தயாரிப்பாக கர்வ் (Curvv) பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இதன் அறிமுகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
முதலில் கர்வ் இவி (Curvv EV) எலக்ட்ரிக் கார் மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்படும் எனவும், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினை கொண்ட டாடா கர்வ் கார்கள் வருகிற செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்யூவி கூப்பே ஸ்டைல்: கூப்பே ஸ்டைலிலான தோற்றம் உடைய எஸ்யூவி கார்கள் இந்திய மோட்டார் சந்தைக்கு மிகவும் புதியவையாகும். அதிலும் குறிப்பாக, நமது நாட்டின் முதல் எஸ்யூவி கூப்பே கார் டாடா கர்வ் ஆகும். இந்த கூப்பே மாடல் கார்களின் பின் பக்கத்தில் தாழ்வான மேற்கூரை வழங்கப்படுகிறது. அந்த வகையில், டாடா கர்வ் காரின் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தை இணைக்கும் விதத்தில் லைட் பார்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்டீரியர் டிசைன்: டாடா கர்வ் காரின் உள்பக்க வடிவமைப்பு குறித்த விபரங்களை டாடா மோட்டார்ஸ் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்களில், டாடா நெக்ஸானில் உள்ளதை போன்ற டேஷ்போர்டும், டாடா ஹெரியரில் உள்ளதை போன்ற ஸ்டேரிங்கும் புதிய டாடா கர்வில் உள்ளது. டேஸ்போர்டிலும், டோர் பேட்களிலும் வழங்கப்பட்டுள்ள லைட்கள் அனைவரையும் கவரும் விதமாக உள்ளது.
தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்: டாடா கர்வ் காரில் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, மல்டிபிள் வாய்ஸ் அசிஸ்டன்ட், AQI டிஸ்ப்ளே கொண்ட ஏர் பியூரிபையர், ஐரா (iRA) கார் டெக்னாலஜி, சைகை கட்டுப்பாட்டில் இயங்கும் டெயில்கேட், பனோராமிக் சன்ரூஃப், சாய்வு வசதியுடன் கூடிய பின்பக்க இருக்கைகள், வெண்டிலேட் வசதியுடன் கூடிய முன்பக்க இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜர், 6 ஏர்பேக்குகள், லெவல் 2 எடிஎஎஸ், இபிடி மற்றும் ஏபிஎஸ் உடன் கூடிய நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்கம் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
என்ஜீன் மற்றும் கியர் பாக்ஸ்: புதிய கர்வ் மாடலில் மூன்று என்ஜீன் தேர்வுகளைக் கொடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். 120 எச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜீன், 118 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் கிரையோஜெட் டீசல் என்ஜீன் மற்றும் 125 எச்பி பவர் 225 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் ஹைபரியன் பெட்ரோல் டைரக்ட் இன்ஜெக்ஷன் என்ஜீன் என மூன்று வகையான என்ஜீன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து என்ஜீன்களுக்கும் நிலையான 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், கூடுதலாக 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாஸ் மார்க்கெட் கார் ஒன்றில் டீசல் என்ஜீனுடன் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் வசதி கொடுக்கப்படுவது இதுவே முதல் முறை.
வேரியண்ட்கள்: இந்த புதிய எஸ்யூவி கூப்பே மாடலை ஸ்மார்ட் (Smart), ப்யூர் + எஸ் (Pure + S), கிரியேட்டிவ் + எஸ் (Creative + S), அக்காம்ப்ளிஷ்டு + எ (Accomplished + A) என 4 வேரியண்ட்டுகளாக அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்த வேரியண்ட்களின் விலைகள் செப்டம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கர்வ் இவி எலக்ட்ரிக் கார் கிரியேட்டிவ் 45 (Creative 45) , அக்காம்ப்ளிஷ்டு 45 (Accomplished 45), அக்காம்ப்ளிஷ்டு 55 (Accomplished 55), அக்காம்ப்ளிஷ்டு + எஸ் 45 (Accomplished +S 45), அக்காம்ப்ளிஷ்டு + எஸ் 55 (Accomplished +S 55), எம்பவர்ட் + 55 (Empowered + 55), எம்பவர்ட் + எ 55(Empowered + A 55) என 7 வேரியண்ட்டுகளாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வேரியண்ட்களின் விலைகள் இன்னும் தனித்தனியே அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஆரம்ப விலையை சுமார் ரூ.17.49 லட்சம் என்கிற அளவில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: அதிரடியாக குறைந்த ஆப்பிள் ஐபோன்கள் விலை! என்ன காரணம் தெரியுமா?