ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் முதன்முறையாக ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் ஆசிரியை (AI Teacher) அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 50 மொழிகளில் பேசும் இந்த ரோபோட்டிக் ஆசிரியையுடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முறையாக ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் ஆசிரியை (AI Teacher) அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்காக ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் ஆசிரியை (Robotic teacher with AI technology) பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று (ஏப்ரல்9) இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இது குறித்து பள்ளி தாளாளர் பில்லிகிராம் கூறுகையில், “50 மொழிகளில் பேசக்கூடிய திறன் படைத்த, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ ஆசிரியையின் பெயர் மார்க்ரெட். பள்ளி மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதற்காக ஏஐ தொழில்நுட்பம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் சந்தேகங்களுக்கு பல்வேறு விதமான பதில்கள் அளிக்கக் கூடிய வகையில், புதிய ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஆசிரியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளோம் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு, 50 மொழிகளில் பேசக் கூடிய ஏஐ தொழில்நுட்ப ரோபோட்டிக் ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏஐ (AI) ஆசிரியை மார்க்ரெட் உடனடியாக பதில் அளித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை மாணவர்கள் ஆச்சரியமாக கண்டு களித்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்