இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்! பிரதமர் மோடி விருப்பம்!
நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்த தினத்தை ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக இந்தியா கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Published : August 23, 2025 at 6:06 PM IST
புதுடெல்லி: விண்வெளி துறையில் இந்தியா புதிய வரலாறு படைக்க வேண்டும் என தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 23, 2023-ல் சந்திரயான்-3 இல் இருந்து விக்ரம் டேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவில் தரையிறங்கியது. பிரக்யான ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கிய அந்த இடத்திற்கு சிவசக்தி என இந்தியா சார்பில் பெயரிடப்பட்டது. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. மேலும், நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்த இந்த தினத்தை இந்தியா ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், இரண்டாவது தேசிய விண்வெளி தினம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணன், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ககன்யான் திட்ட விஞ்ஞானிகள் அஜித் கிருஷ்ணா, பிரசாந்த் பி நாயக், அங்கத் பிரதாப் மற்றும் விண்வெளிக்கு சென்று அண்மையில் திரும்பிய சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆரியபட்டாவில் இருந்து ககன்யான் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு இவ்விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், "கடந்த 2023-ல் இதே நாளில் தான் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக சந்திரயான்-3 தரையிறங்கியது. சந்திரயான் தரையிறங்கிய அந்த இடத்திற்கு பிரதமர் மோடி சிவசக்தி என்று பெயரிட்டார். இந்த வெற்றி தினத்தை எப்போதும் நினைவு கூறும் விதமாக அதை தேசிய விண்வெளி தினமாக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி" என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, "இந்தியா விண்வெளி துறையில் புதிய சாதனைகளை படைக்க ஆரம்பித்துள்ளது. அதன் தொடக்கப்புள்ளியாக சந்திரயான் திட்டம் இருந்தது. அடுத்தடுத்து புதிய பயணங்களுக்கான திட்டங்கள் நம்மிடம் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபான்ஷூ சுக்லாவிடம் பேசும் போது விண்வெளியை பற்றிய பல்வேறு புதிய தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. விண்வெளியில் இந்தியா எல்லையில்லா சாதனைகளை படைக்க வேண்டும் என்ற உந்துதல் தனக்கு அந்த சந்திப்பு மூலம் கிடைத்தது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா விண்வெளி துறையில் தனித்து இயங்கும் விதமாக இந்தியாவுக்கு என்று தனி விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும். அதுவே ஒவ்வொரு இந்தியனின் விருப்பமாகவும் இருக்கும். சுக்லாவிடம் பேசிய போது இந்த எண்ணம் எனக்கு மேலும் அதிகரித்தது. இந்திய விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டும். இந்தியா அடுத்து வரும் ஆண்டுகளில் விண்வெளித்துறையில் புதிய அத்தியாயத்தை படைக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
சந்திரயானின் பயணம்
சந்திரனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக கடந்த 2008-ல் பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட் மூலம் சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஜூலை 2019-ல் ஏவப்பட்ட சந்திரயான்-2 ஆர்ப்பிட்டர் சந்திரனின் சுற்றுப்பாதையில் இறங்கி உயர் திறன் கொண்ட தரவுகளை அனுப்பியது. அதே நேரத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் போது தனது தகவல் தொடர்பை இழந்ததால் இந்த திட்டம் முழுவதும் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 23, 2023-ல் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது. இது நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவு பற்றிய பல்வேறு தரவுகளை பெறவும், ஆராய்ச்சிகளை முன்னெடுக்கவும் சந்திரயான்-3 திட்டம் முக்கிய காரணியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

