ஃபுளோரிடா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாதங்களாக தவித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரை மீட்க, எலான் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மேற்கொண்ட நடவடிக்கை சிறப்பு மிக்கதாக மாறி, வரலாற்றில் இடம் பிடித்தது.
அதன்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் கடந்த 15ஆம் தேதி அதிகாலை 4.33 மணிக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது. 'டிராகன்' என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் 16ஆம் தேதி விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது. அப்போது புதிதாக அங்கு சென்ற விண்வெளி வீரர்களை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் குழுவினரை சுமந்து கொண்டு பூமிக்கு திரும்பும் தமது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை 'டிராகன்' விண்கலம் நேற்று காலை 10:15 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது. 17 மணி நேர நீண்ட பயணத்துக்கு பிறகு, இந்திய நேரப்படி இன்று அதிகாலை சரியாக 3:27 மணிக்கு ஃபுளோரிடா கடற்கரை பகுதியில் தரையிறங்கியது டிராகன் விண்கலம். இந்த நிகழ்வை, நாசா தனது இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பியது. இதனை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் நேரலையாக கண்டுகளித்தனர்.
கடலில் தரையிறங்கிய டிராகன் விண்கலன் படகு மூலம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்டது. பின்னர், அந்த கப்பலில் பத்திரமாக வைக்கப்பட்ட டிராகன் விண்கலத்தின் கதவை நாசா ஊழியர்கள் மெல்லத் திறந்தனர். அப்போது விண்கலத்தினுள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உள்ளிட்ட 4 பேரும் எப்படி உள்ளனர் என்பதை பார்க்க உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருந்தது.
Tune in for a splashdown!@NASA_Astronauts Nick Hague, Suni Williams, Butch Wilmore, and cosmonaut Aleksandr Gorbunov are returning to Earth in their @SpaceX Dragon spacecraft. #Crew9 splashdown is targeted for 5:57pm ET (2157 UTC). https://t.co/Yuat1FqZxw
— NASA (@NASA) March 18, 2025
அந்த நிமிடம், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு பேரும் பாத்திரமாக அமர்ந்த நிலையில், கேமிராவைப் பார்த்து கை அசைத்தனர். பின்னர், 4 பேரும் நலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட நாசா மீட்புப் படையினர், அவர்களை பத்திரமாக ஒவ்வொருவராக வெளியே அழைத்து வரும் நடவடிக்கையை மேற்கொண்டது.
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களையும் வெளியே அழைத்து வரும் நடவடிக்கை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. பின்னர், சுனதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். சரியாக 4.23 மணிக்கு வெளியே அழைத்து வரப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் கேமிராவைப் பார்த்து கை அசைத்து, உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், மீட்புப் படையினருடன் கை குலுக்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர்கள் அனைவருக்கும் முதற்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 45 நாட்கள் மறுவாழ்வு திட்டத்துக்காக அவர்கள் கப்பல் மூலம் ஹூஸ்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முன்னதாக, அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் செய்தனர்.
We're getting our first look at #Crew9 since their return to Earth! Recovery teams will now help the crew out of Dragon, a standard process for all crew members after returning from long-duration missions. pic.twitter.com/yD2KVUHSuq
— NASA (@NASA) March 18, 2025
இருவரும் 8 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து பூமிக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.அதனால் அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தொடர்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சுமார் 9 மாதங்களாக விண்வெளியில் தங்கி இருந்த இவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களை மீட்க பல முயற்சிகளை மேற்கொண்டும், எதுவும் பலன் அளிக்காததால் விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கும் அவர்களை அழைத்து வருவதற்கு எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.