"எதிர்காலமே AI தான்.. மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க தொடங்குங்கள்" - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!
மாநில கல்விக் கொள்கையில் தொழில்நுட்ப கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Published : August 24, 2025 at 10:34 PM IST
சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) குறித்தான பாடத்திட்டத்தை தற்போதே மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தொடங்க வேண்டும் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் அமைந்துள்ள கோச்சடையான் டெக்னாலஜிஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம், மேக்-ஜிபிடி (MakeGPT) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்குவதற்கு நிறைய தரவுகளை உள்ளீடு செய்ய வேண்டும். அனைத்தும் தானியங்கி மயமாகி வரும் சூழலில் செயற்கை நுண்ணறிவுவின் பங்கு முக்கியமானதாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவது அவசியம்.
செயற்கை நுண்ணறிவால் கல்வித்துறை மிகப்பெரிய மாறுதல்கள் அடையப்போகிறது. வேலைவாய்ப்புகள் குறையும், சேவை துறையில் நிர்வாக ரீதியில் மாற்றம் ஏற்படும். இந்திய மக்கள் அடுத்த 20 வருடங்களில் அதிக வேலையாட்களாக உலகெங்கும் இருப்பார்கள். தெற்கு மட்டுமே இந்தியாவில் வளர்ச்சியடைந்த பகுதியாக உள்ளது. அதற்கு காரணம் அனைவரையும் கல்வி பயில வைத்தது தான்,” என்றார்.
மேலும் பேசிய அவர், “கல்வி நிறுவனங்கள் புராகிராமிங், செயற்கை நுண்ணறிவு குறித்து கற்றுக்கொடுப்பதை தற்போதே தொடங்க வேண்டும். மின்னணு, தோல், ஜவுளி துறை வளர்ச்சி தான் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம். குறிப்பாக தமிழ்நாட்டில் நுகர்வோர் சந்தை வலுவாக உள்ளது.
அதனால் உலக சந்தைக்கு மட்டுமே இல்லாமல் உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யும் கண்டுபிடிப்புகளும் வெற்றி பெற முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் கோயம்புத்தூரில் நடந்த ஒரு மாநாட்டில் ஒரு கல்லூரி முதல்வர், அரசு வழங்கும் புதுமை விருதுகள் தொழில்நுட்ப துறைக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.
கலை மற்றும் அறிவியல் துறைக்கும் தனியான விருதுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளில் தொடக்க நிறுவனங்கள் மற்றும் புதுமை வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மனப்பாடமாக கற்றல் முறைக்கு மாறாக மாணவர்களுக்கு சிந்தனையை ஊக்குவிக்கும் விதமாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மாணவர்கள் தங்கள் எதிர்கால பாதையை தேர்வு செய்வதில் சரியான ஆலோசனைகள் கிடைக்காமல் அனைவரும் ஒரே துறையைத் தேர்வு செய்வது ஒரு பிரச்சினையாக உள்ளது. அதற்காக தொழில்வழிகாட்டல் மற்றும் புதிய வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவது அவசியம் என கூறப்பட்டது.
தற்போது இணையவழி கல்வி வளங்கள் பரவலாக கிடைக்கின்றன. ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு தேவையானதை இணையத்தின் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ள முடியும். அதற்கான உயர்வேக இணைய வசதி மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது. முடிவில், மாணவர்கள் தங்கள் ஆர்வத்திற்கேற்ற கல்வியை தேர்வு செய்து சுயமாக கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குவது மிக முக்கியம் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மாநில கல்விக்காெள்கையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கோச்சடையான் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நாணு சுவாமி, “பல ஆண்டுகள் பொறியியல் பயிற்சி தேவைப்படும் பாரம்பரிய IoT (Internet of Things) மேம்பாட்டு முறைகளுக்கு மாற்றாக மேக்ஜிபிடி பயனர்கள் புராஜெக்ட் யோசனைகளை சாதாரண மொழியில் பதிவு செய்தாலே போதுமானது. அது முழுமையாக செயல்பட்டு IoT தீர்வுகளை தானாகவே உருவாக்கி தந்துவிடும்.
மேலும், தலைகீழ் ப்ளூம்ஸ் வகைப்பாடு (Inverted Bloom’s Taxonomy) என்ற கல்வி அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கற்பவர்கள் முதலில் சிக்கலான தயாரிப்புகளை உருவாக்கி பின்னர் அடிப்படை தொழில்நுட்பக் கொள்கைகளை ஆராய்கின்றனர். இது, கற்றல் ஈடுபாட்டையும், நிபுணத்துவம் மிக்க திறமையையும், கற்பவர்களிடையே மேலும் துரிதமாக்கும்.
| இதையும் படிங்க: இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்! பிரதமர் மோடி விருப்பம்! |
இந்த தளத்தை பயன்படுத்தி உரையாடல் சார்ந்த திட்டங்கள் உருவாக்கத்திற்கு இயல்பான உரையாடலில் இருந்து வன்பொருள் உருவாக்க முடியும். தேவையான கூறுகளை தானாகவே தேர்வு செய்து முழுமையான அமைப்பை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது. உரையாடல் மூலமே வடிவமைப்பை மேம்படுத்தி, செம்மைப்படுத்தும் வசதியும், சூழலுக்கு ஏற்ப கூறுகளின் செயல்பாட்டை விளக்குவதற்கு கல்விசார் உள்நோக்கு வழிமுறையும் உள்ளது.
எடுத்துக்காட்டாக, செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படும்போது என் செல்போனுக்கு எச்சரிக்கை அனுப்பும். மண் ஈரப்பதத்தை கண்காணிக்கும் அமைப்பை உருவாக்கு என்று ஏஐயிடம் நீங்கள் கூறும்போது அடுத்த கணமே அதற்கான பாகங்களின் பட்டியல், மென்பொருள் குறியீடு மற்றும் பொருத்துவதற்கான வழிமுறைகளுடன் ஒரு முழுமையான முன்மாதிரி வடிவமைப்பு உங்கள் கைகளில் கிடைக்கும் வகையில் தரவுகளையும், தேவையான பொருட்கள் பட்டியலையும் தரும்." என்று தெரிவித்தார்.

