சென்னை: சென்னை ஐஐடி புத்தாக்க தொழில் நிறுவனமான (ஸ்டார்ட்-அப்) 'பிளக்ஸ்மார்ட்' உள்நாட்டு தொழில்நுட்பத்தில் மின் வாகனங்களுக்கு தேவைப்படும் சார்ஜர்களை தயாரித்து வருகிறது. பரவலான மின்னழுத்தத்தை வழங்கும் இந்த சார்ஜர்கள் அனைத்து மின் வாகனங்களையும், ஒரே சார்ஜிங் யூனிட்டில் இருந்து சார்ஜ் செய்ய பெரிதும் உதவுகிறது.
இந்த வரிசையில், தற்போது சென்னை ஐஐடியின் ஸ்டார்ட் அப் பிளக்ஸ்மார்ட் நிறுவனம் 240kW DC ஃபாஸ்ட் சார்ஜர் ஒன்றை உருவாக்கியுள்ளது. பிளக்ஸ்மார்ட் நிறுவன சார்ஜர்களின் தரத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI) தரச்சான்றினை வழங்கியுள்ளது.
இந்த ஆராய்ச்சி சங்கம் மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் மற்றும் ஆட்டோமோட்டிவ் தொழில்துறையின் கூட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சார்ஜர்களுக்கு தேசிய அளவில் தரச்சான்று கிடைத்திருப்பது இத்துறையின் வளர்ச்சியை பெரிதும் ஊக்குவிக்கும்.
இதன் மூலம் கனரக வாகனங்களுக்கான மின்சார வாகன சார்ஜருக்கு 'ARAI' சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் ஸ்டார்ட்- அப் நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்மார்ட் சார்ஜர் ஸ்டார்ட்-அப் பிளக்ஸ்மார்ட் நிறுவனம் மாறியிருக்கிறது.
பசுமை எரிசக்தியை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில் மின் வாகனங்களுக்கான சார்ஜர்களின் தயாரிப்பு தொழில் துறையின் வளர்ச்சிக்கு மேலும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 240kW DC ஃபாஸ்ட் சார்ஜரின் முழு வன்பொருள் மற்றும் மென்பொருள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட கூறுகளை நம்பி இருப்பதை குறைத்து, மின் வாகன உற்பத்தி துறைக்கு 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஊக்குவிக்கும வகையில் அமைந்துள்ளது. இந்த சார்ஜர்களின் வாயிலாக உயர் ரக கார்கள் மற்றும் கனரக மின் வாகனங்களை வெறும் 20 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.
பிளக்ஸ்மார்ட் நிறுவனத்தின் 240kW DC ஃபாஸ்ட் சார்ஜர் அதிக சக்தி கொண்ட மின் வாகனங்களை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உயர்நிலை நான்கு சக்கர வாகனங்கள், வணிகக் கடற்படை வாகனங்களை சார்ஜ் செய்யவும் பெரிதும் உதவுகிறது.
அத்துடன் இந்த சார்ஜர் உயர் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் இந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தரங்களை கடைபிடிப்பதை உறுதி செய்கிறது. ஒரு ஸ்மார்ட் பவர் டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டம் ஆற்றல் பயன்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் கிரிட் ஓவர்லோடையும் வெகுவாக தடுக்கிறது.
இதுகுறித்து பிளக்ஸ்மார்ட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் சாமிநாதன் கூறும்போது, ''இந்தியாவில் மின் வாகன சார்ஜிங் தொழில்நுட்பம் வேகமான சார்ஜிங், ஸ்மார்ட் சுமை மேலாண்மை மற்றும் உள்நாட்டு சார்ஜர் மேம்பாடு ஆகியவற்றில் புதுமைகளுடன் உருவாகி வருகிறது.
இறக்குமதியை நம்பியிருப்பது மற்றும் செலவுகளை குறைப்பதற்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அதிக சக்தி கொண்ட சார்ஜர்களை நோக்கி மின்வாகன சார்ஜர் தயாரிப்பு தொழில் துறை நகர்கிறது.
இதையும் படிங்க: BREAKING: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உருவானது! அமித் ஷா அறிவிப்பு!
எங்கள் உள்நாட்டு கட்டுப்பாட்டாளர் மற்றும் PLC தொகுதிகள் நாட்டின் மின் வாகன தயாரிப்பு துறையில் இறக்குமதியை வெகுவாக குறைக்கவும், முக்கிய பங்கு வகிக்கிறது. 240kW DC வேகமான சார்ஜர் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் வசதியை கொண்டுள்ளது. இது சார்ஜர் செயலிழப்பை கணித்து தடுக்கும் மற்றும் அதிக இயக்க நேரத்தை உறுதி செய்யும்.
240kW சார்ஜர் மூலம் ஒரே நேரத்தில் பல வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்தியாவின் அதிக வேக சார்ஜிங் உள்கட்டமைப்புக்கான தேசிய மின் வாகன கொள்கையுடன் 240kW சார்ஜர் ஒத்துப்போகிறது.
மேலும் செலவு குறைந்த மற்றும் நம்பகமான அதிக வேக சார்ஜர்களை தேடும் சந்தைகளில் சர்வதேச விரிவாக்கத்திற்கான ஒரு சாத்தியத்தையும் 240kW சார்ஜர் உருவாக்குகிறது. பிளக்ஸ்மார்ட் ஒரு அறிவார்ந்த மற்றும் திறமையான சார்ஜிங் தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற முன்னோடி மின் வாகன சார்ஜிங் தொழில்நுட்ப நிறுவனமாகும்.'' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்