சென்னை: சென்னை ஐஐடியின் கண்டுப்பிடிப்பான ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் படி சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான டிராக் அமைத்து, ரயில் இயக்கத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
இது குறித்து சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “சென்னை ஐஐடியின் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை ரயில்வேயின் நிதியுதவியுடன் 2 ஆண்டிற்கு முன்னர் ஆரம்பித்தோம். தையூர் வளாகத்தில் 410 மீட்டர் நீளம் உள்ள டிராக் அமைக்கப்பட்டுள்ளது. அந்த டிராக்கில் ஹைபர்லூப் செயல்பாடுகள் 3 விதமாக நடைபெறுகிறது. ஹைபர்லூப் தொழில்நுட்பத்தில் உள்ள டிராக் மீது கார் பாேன்ற அமைப்பு ஓட்டப்படும்.
அதில் டிராக் மேலே கார் செல்வது போன்ற தொழில்நுட்பத்தில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். அதன்படி, ஒரு மணிநேரத்திற்கு 200 கிமீ தூரத்தை கடக்கலாம். அடுத்த தொழில்நுட்பத்தில் பாட் (ஹைப்பர்லூப் பயணப்பெட்டி) சற்று மேலே தூக்கி காற்றில் செல்லும் முறையில் ஒரு மணி நேரத்திற்கு 400 கிலோமீட்டர் தூரம் செல்லும். அதற்கு அடுத்தபடியாக அடுத்த தொழில்நுட்பத்தில் முழுவதும் டிராக்கை விட்டு விலகி மேலே காற்றில் சென்றால் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.
இதனை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது முதல் தொழில்நுட்பமான ரயிலில் செல்வதை இயக்கி காண்பித்தோம். அடுத்ததாக லேவிடேஷன் (levitation) முறையை பாட்டிற்கு வெளியில் செய்து காண்பித்தோம். மேலும், விர்ஷ்வல் ரியாலிட்டி முறையில் பயணம் எப்படி இருக்கும் என்பதையும் காண்பித்தோம்.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் அனைத்து செயல்பாடுகளையும் ஜூலை மாதத்தில் வேக்யூம் போட்டு முழுவதும் இயக்கி காண்பிக்க உள்ளோம். சர்வதேச அளவில் நடத்தப்பட்ட போட்டியால் பல்வேறு ஆலோசனையும் கிடைத்துள்ளது. அதனையும் பயன்படுத்தி செயல்படுத்த உள்ளோம். ஜூலை மாதத்தில் தொழில்நுட்ப சோதனைகள் முடிந்துவிடும்.
மேலும் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள டிராக் நேராக இருக்கிறது. எனவே அதனை வளைவுகள், மேலேயும், கீழேயும் செல்லுதல் போன்ற முறையிலும் பரிசோதனை செய்ய டிராக் போட உள்ளோம். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐசிஎப் நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களின் உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: விண்வெளி செல்லும் ‘வியோமித்ரா’ - இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்! |
ஹைப்பர்லூப்பை வணிகமயம் ஆக்குவதற்கு ‘Tutr Hyperloop’ என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பித்துள்ளோம். அடுத்த நிலையில் சரக்கு போக்குவரத்து தொடர்பான மேம்படுத்தல்களைத் தொடங்க உள்ளோம். துறைமுகத்தில் இருந்தும், விமான நிலையத்தில் இருந்து சரக்குகளை வெளியில் எடுத்துச் செல்லும் வகையில் கட்டமைப்புகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை வணிகப்படுத்துவதற்காக 2 மாதத்திற்குள் சில புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த முயற்சிகளை வெற்றிகரமாக்க துரிதமாக செயல்பட்டு வருகிறோம்.
சர்வேதச அளவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப போட்டியை நடத்தியபோது, முதலில் 410 மீட்டர் தூரத்திற்கு டிராக் அமைக்கப்பட்டது. அதிகளவில் மென்பொருள் உதவியும் அளிக்கப்பட்டதால், அவை பயனுள்ளதாக இருந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். மதிப்பீடு செய்தததும் சிறப்பாக இருந்ததாகக் கூறினார்.
இதில் மனிதர்களை அனுப்புவதற்கு 5 ஆண்டுகள் தேவைப்படும். முதலில் பரிசோதனை அடிப்படையில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே உடன் இணைந்து ஏற்பாடுகளை செய்யலாம் என முடிவு செய்துள்ளோம். அதனைத் தொடர்ந்து சிறிய அளவிலான தூரத்திற்கு 50 முதல் 100 கிலோ மீட்டர், பின்னர் 500, 1000 கிலோ மீட்டர் என விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். பயண செலவும் அதிகமாக இருக்காது.
கட்டமைப்பை உருவாக்கும் போது மெட்ராே ரயில் வழித்தடம் அமைப்பதற்கு ஆகும் பொருளாதாரம் தேவைப்படும். இப்படி கட்டமைப்புகள் உருவாகும் நிலையில், ஹைப்பர்லூப் நகர போக்குவரத்துடன் இணங்கி செயல்பட முடியும். மேலும், பல இடங்களில் நிறுத்த முடியும். விமானத்தை போல இறங்குவதற்கு நிலையம் அமைக்கத் தேவையில்லை,” என்று தெரிவித்தார்.