- BY - எஸ். ரவிச்சந்திரன்
சென்னை: ''வீட்டை கட்டிப் பார். கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்வார்கள்" என கிராமப் புறத்தில் கூறுவார்கள். இதன் ஒவ்வாெறு பணியும் மிகவும் சவால் நிறைந்ததாகவே அமையும். குறிப்பாக வீடு கட்டுவதற்கு அடிதளம் அமைப்பதில் இருந்து இறுதி வரை ஒவ்வொரு நிலைக்கும் குறிப்பிட்ட நாட்கள் கால அவகாசம் அளித்து, உறுதித்தன்மை அடைந்த பின்னர் கட்டுமான பணிகளை செய்ய வேண்டும்.
இதனால் தான் வீடு கட்டுவதற்கு பல மாதங்கள் ஆகிறது. சிறிய அளவிலான வீட்டை கூட விரைந்து கட்ட கட்டுமான பொருட்கள் கிடைத்தாலும், தற்போது வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. தரமான கட்டுமானத்தை அமைப்பதில் அதற்கான கான்கிரீட் கலவையும் முக்கிய பங்கினை வகிக்கிறது. கட்டுமானத்தில் முக்கியமானது எம்சாண்ட் அல்லது மணல் ஆகியவற்றுடன் சேர்க்கப்படும் சிமெண்டை சரியாக கலவை செய்வதே முக்கியமாகும். மனித சக்தியை பயன்படுத்தி கலவையை சரியாக கலப்பது அனைவராலும் சரியாக செய்ய முடியாது.
அரசால் மக்களுக்கு மானியத்தில் கட்டித் தரப்படும் வீடுகளை அமைப்பதற்கு அதிக நாட்கள் ஆவதுடன், இந்த திட்டத்தை முடிப்பதற்கு அதிக காலதாமதமும் ஏற்படுகிறது. இந்த முறையில் கட்டமைப்பை பெரிய நிறுவனத்தின் மூலம் செய்யும் போது அதன் உறுதித்தன்மை சரியாக அமைவதுடன், நீண்ட நாட்களுக்கு உறுதியாக அமையும்.
தொழிற்சாலைகள் பெரிய திட்டங்களுக்கு தேவையான தூண்களை தயார் செய்து பொருத்தினாலும், பெரும்பாலும் வீடு கட்டுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலையில் குறைந்த செலவில் தனியாக வீட்டை கட்டுவதற்கான பேனல்களை தொழிற்சாலையில் செய்து எடுத்து வந்து பொருத்தி கட்ட முடியும் என்பதை ஆராய்ந்து வடிவமைத்துள்ளனர் கட்டமைப்பு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிஞர்கள்.
அது மட்டுமல்லாமல் வீடு கட்டுவதற்கான பேனல்களை தொழிற்சாலையில் செய்து எடுத்து வந்து கட்டப்படும் இது போன்ற கட்டடம் 70 ஆண்டுகள் வரையில் உறுதித்தன்மையுடன் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையிலும், அதிக வெப்பத்திறனை தாங்கும் விதத்திலும் நவீன தொழில்நுட்பத்துடன் சுவர்கள் தனியாக தயார் செய்து பொருத்தி வீட்டை கட்டியுள்ளனர்.
இதற்காக இபிஎஸ் முறையில் ப்ரீகாஸ்ட் கான்கிரீட் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் (Expanded Polystyrene - EPS) வடிவமைப்பில் முழு சுவரை தொழிற்சாலையில் உருவாக்கி கொண்டு வந்து பொருத்தி வீடு கட்டப்பட்டுள்ளது.
மேலும் எடைகுறைவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டை பூமிக்கடியில் அமைக்கப்பட வேண்டிய பில்லர்களையும் தனியாக தயார் செய்து குழியில் பொருத்தி கட்டமைப்பை நிறுவி உள்ளனர்.
இது தொடர்பாக சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆனந்தவல்லி கூறும் போது, ''இரு புறமும் சிமெண்ட் கல் பயன்படுத்தி நடுவில் ‘தெர்மாகோல் நிறுவப்பட்டுள்ளது. மேலும், கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் இரும்பு கம்பிகள் உள்பக்கம் பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய புத்தகப் பூங்கா... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இஐஎம்பி தொழில்நுட்பம், கால்சியம் கார்பைடு கசடு (கால்சியம் கார்பைடு (CaC2) என்ற ரசாயனத்தை நீருடன் சேர்த்து பயன்படுத்தும் போது உருவாகும் ஒரு கழிவு பொருள் மற்றும் பறக்கும் சாம்பல் போன்ற தொழில்துறை கழிவுகளின் தொகுதிகளை பயன்படுத்துகிறது. EIMB பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டமைப்பு சுவர்கள், புதிய வடிவியல் உள்ளமைவுகள் மற்றும் புதிய பிணைப்பு முறை மூலம் வடிவமைக்கப்படுகிறது.
மேலும் வீட்டின் மேற்பகுதியில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திற்கான தகடுகள் பொருத்தப்பட்டு இருப்பதால் அந்த வீட்டினை கட்டுவதற்கான செலவையும் மீண்டும் திரும்ப பெற முடியும்.
இந்த கட்டமைப்பில் 4 அடுக்கு வரையில் வீடு கட்ட முடியும். அதிகளவில் வீடுகளை விரைவாக கட்டுவதற்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் எளிதாக அமையும்.'' என சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆனந்தவல்லி தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.