
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த விதிமுறைகள்! சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் தகவல்
ஏஐ தொழில்நுட்பத்தை அனைத்துத்துறையிலும் பயன்படுத்தும்போது, அதற்கான அனைத்து தரப்பினரின் பொறுப்புகள் என்ன என்பது குறித்த விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

Published : October 8, 2025 at 3:00 PM IST
By - எஸ்.ரவிச்சந்திரன்
சென்னை: இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்புடன் பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவில் மத்திய அரசு வெளியிட உள்ளதாகவும் சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி-யின் வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு பள்ளியின் AI மையம் (CeRAI), இந்தியாவிலும் உலகளவிலும் ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை ஐஐடி வளாகத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை திறன்பட நிர்வகிப்பது குறித்த கருத்தரங்கம் செவ்வாய்கிழமை (அக்.7) நடைபெற்றது. அதாவது இந்தியாவின் தலைமையில் '2026-ல் AI' உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த தொழில்நுட்பத்தில் உள்ள சவால்கள் குறித்து சென்னை ஐஐடி ஆய்வு செய்யவுள்ளது.
AI-க்கு தனியாக சட்டம்
இதுகுறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த சென்னை ஐஐடியின் வத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் பேராசிரியர் ரவீந்திரன், "இந்த மாநாட்டில் ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி நிர்வாகிக்கிறது என்பது குறித்து விவாதிக்கவுள்ளோம். ஏஐ தொழில்நுட்பம் எல்லாத் துறைகளையும் பாதிக்கும் நிலையில் உள்ளது. ஏஐ-க்கு என தனியாக சட்டம் இயற்ற முடியாது.
ஆனால், ஏஐ தொழில்நுட்பத்தை நிதி, க்ல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தும்போது அதற்கேற்ப சட்டங்களை இயற்ற வேண்டும். அதாவது எந்தத் துறையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போதும், அந்தத் துறையில் ஏற்கெனவே உள்ள சட்டங்களில் தேவைக்கேற்ப திருத்தங்களை செய்ய வேண்டும். மாறாக ஏஐ-க்கு தனியாக சட்டம் இயற்றக்கூடாது.
ஒவ்வொருத் துறைக்கு தனித்தனியாக சட்டம் போட்டால், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி APP-களை உருவாக்க முடியாது. எனவே, அந்தந்த துறைகளில் ஏற்கெனவே உள்ள சட்டங்களை பயன்படுத்தி தான் இத்தொழில்நுட்பத்தை நிர்வகிக்க வேண்டும். எனவே தான் அனைத்துத் துறையில் இருந்தும், ஏஐ தொழில் நுட்பத்தை உருவாக்குபவர்கள், பயன்படுத்துபவர்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து இத்தொழில்நுட்பத்தை நிர்வகிப்பது குறித்து விவாதிக்க உள்ளனர்," என்றார்.
AI-யை பாதுகாப்பாக பயன்படுத்த நடவடிக்கை
மேலும் அவர் கூறும்போது, "ஏற்கெனவே நாங்களும் சில ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம். இது தொடக்கம் தான். இதுபோன்ற கருத்தரங்குகள் இந்தியாவில் நிறைய நடைபெற வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இந்தியா பலவிதமான கலாச்சாரம் கொண்ட நாடு. எனவே பல்வேறு தரப்பினருக்கும் முழுமையாக கிடைக்கும் வகையில் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பம் என்பது ஒரு கருவி. அதில் கிடைக்கும் தகவல்கள் எப்போதும் சரியாக இருக்கும் என்பது கிடையாது. இதுகுறித்து மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும். பெரிய நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டால் அதுகுறித்த வெளிப்படையான தகவலுடன் அதனை மக்களுக்கு அளிக்க வேண்டும். அதன் பின்னர் அதனை பயன்படுத்துவர்களுக்கு பிரச்சனை வந்தால் அவர்களதான் பொறுப்பு.
விரைவில் ஏஐ தொழில்நுட்பத்திற்கு விதிகள்
ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு குறித்து நிறுவனங்கள் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்ககூடிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்திற்கு விதிகள் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதுவும் விரைவில் வந்துவிடும்," என்று ரவீந்திரன் கூறினார்.
அத்துடன், "இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான குழு அளித்த அறிக்கையில் 7 முக்கியமான சூத்திரங்களை வழங்கியுள்ளோம். அதில், வங்கி சேவைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போதும், நம்பிக்கை உடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு தீமை ஏற்படும் வகையில் ஏஐ எடுக்கும் முடிவுகள் இருக்கக்கூடாது. அதனை இயக்குவதும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
AI முடிவுகளுக்கு யார் பொறுப்பு
ஏஐ புதுமையாக சேவை அளிக்கும்போது பாதுகாப்பாக அளிக்க வேண்டும். ஏஐ தரவுகளின் மூலம் செய்யும்போது, எல்லாேருக்கும் ஒரே வகையில் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். ஏஐ தரவுகளை எடுக்கும்போது பாகுப்பாடு இல்லாமல் அளிக்க வேண்டும். ஏஐ மூலம் அளிக்கப்படும் முடிவுகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை என யாரும் கூறக் கூடாது. அதற்கு யார் பாெறுப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏஐ பிளாக் பாக்ஸ் மூலம் தரவுகளை கொடுத்தப் பின்னர் முடிவுகளை கூறக்கூடாது.
அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற நிலையில் விளக்கம் கொடுப்பதற்கான முறைகளையும் கூற வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளும்போது, வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்க வேண்டும்" என்று பேராசிரியர் ரவீந்திரன் கூறினார்.
ஏஐ-க்கான பொறுப்பை வகுக்க வேண்டும்
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, "எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும் அதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டியதுள்ளது. தற்பொழுது ஏஐ தொழில்நுட்பத்தை நிர்வகிக்கவும் விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை அனைத்து துறையிலும் பயன்படுத்தும்போது, அதற்கான பொறுப்பு என்ன என்பது குறித்த வரையறையையும் உருவாக்க வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பத்திற்கான பொறுப்புகளை வகுக்க வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை நிர்வகிக்க உள்ளோம் என்பதையும், உலக அளவிலான கருத்தரங்கிற்கு முன்னோட்டாமாக இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது," என்று காமகோடி தெரிவித்தார்.
| இதையும் படிங்க: ''கண்களை கவரும் பாதுகாப்பு துறை சாதனங்கள்'' - பொருளாதார வளர்ச்சியை பறைசாற்றும் ‘ஏரோ டெஃப்கான்’ மாநாடு! |
இந்த கருத்தரங்கில் சென்னை ஐஐடியின் வத்வானி ஸ்கூல் ஆப் டேட்டா சயின்ஸ் ஆய்வுகளை செய்து வெளியிட்ட அறிக்கைகளையும், ஏஐ தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்வதற்கான கருவியையும் வெளியிட்டனர்.
ஏஐ மதிப்பீட்டு கருவியின் நோக்கமாக நிலையான, வெளிப்படையான மற்றும் அளவிடக்கூடிய முறையில் மதிப்பிடும் ஒருங்கிணைந்த மற்றும் தானியங்கி கட்டமைப்பை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஏஐ அமைப்புகளை நியாயமாக ஒப்பிட்டு, பல அம்சங்களில் செயல்திறனை அளவிடுகின்றனர். ஏஐ பயன்படுத்தலில் நம்பிக்கையை வளர்க்கின்றனர். ஏஐ முகவர்கள் கட்டமைக்கப்பட்ட சோதனைத் திட்டங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
AI கட்டமைக்கப்பட்ட சோதனைத் திட்டங்களுக்கு உட்படுத்த மனித தொடர்புகளை உருவகப்படுத்துகிறது. துல்லியம், வலிமை மற்றும் நியாயத்தன்மை போன்ற முக்கிய அம்சங்களில் செயல்திறனை அளவிடுகிறது. அதன் பதிப்பு 0.2.0 இல் ஏழு சோதனைத் திட்டங்கள், 48 முக்கிய அளவீடுகள் மற்றும் பல இந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட சோதனைகள் ஆகியவை நிலையான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டை உறுதி செய்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

