ராணிப்பேட்டை: ஆலப்பாக்கம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நெமிலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள கீழ் வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (23) மற்றும் அவரது நண்பர் பிரேம் (23). இவர்கள் நேற்று (ஏப்ரல் 14) இரவு சேந்தமங்கலத்தில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதே போல, ஆட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (21) மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் (21) இருவரும் ஆலப்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ஆலப்பாக்கம் அருகே சுமார் இரவு 7 மணியளவில் இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. வாகனங்கள் இரண்டும் அதி வேகமாக மோதியதில், நான்கு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர். அதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கீழ் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் ஆட்டுப்பக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த நெமிலி காவல் நிலைய போலீசார், உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் காயமடைந்த ரஞ்சித் மற்றும் பிரேம் இருவரையும் மீட்ட காவல் துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்களை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே பிரேம் உயிரிழந்தார். தற்போது, ரஞ்சித் மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த நெமிலி காவல்துறையினர், விபத்துக்கான காரணம் என்ன? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.