கோயம்புத்தூர்:கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையான வேலந்தாவளம் பகுதியில் நேற்று மாலை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள், தங்கம் கடத்தி செல்லுதல் ஆகியவற்றை தடுக்க காவல்துறை உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், புலனாயவு அமைப்புகளை ஏமாற்றும் வகையில் நூதனமான வழிகளில் எல்லாம் தங்கம், பணம் ஆகியவற்றை கடத்தல் கும்பல் கடத்தி வருகிறது. குறிப்பாக மாநில எல்லைகளின் வழியே இவ்வாறு தங்கம், பணம் உள்ளிட்டவை கடத்தப்படுகின்றன. எனவே மாநில எல்லைகளில் இரு மாநில போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கேரளமாநிலம் பாலக்காடு மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து வந்து கொண்டிருந்த தமிழக பதிவெண் கொண்ட இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: 'பண்றதும் பண்ணிட்டு பலாப்பழமா வைக்கிறீங்க?' - கூண்டில் சிக்கிய கரடி பிடிபட்ட வெறியில் ஆக்ரோஷம்!
இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அணிந்திருந்த உடை வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக தோற்றம் அளித்தது. எனவே, அவரை போலீசார் சோதனையிட்டனர். அவர் சட்டைக்கு உள்ளே நீண்ட பணியன் போன்ற உடையில் ஆங்காங்கே பைகள் வைத்து தைத்த விநோதமான உள்ளாடை அணிந்திருந்தார். அந்த பைகளுக்குள் ரூ.70 லட்சம் ரொக்கப்பணம் பணம் மற்றும் 200 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கேரள போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த இளைஞரிடம் இருந்த உள்ளாடையை அப்புறப்படுத்தி, அதில் இருந்த பணம், தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விநோதமான முறையில் பணம், தங்கத்தை கடத்திய நபர் சாகர் என்பதும், அவருடன் வந்தவர்கள் மணிகண்டன், சந்தீப் என்பதும் தெரியவந்தது. மூவரிடமும் கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணம், நகை எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்தும், யாரிடம் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. யாரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்தும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை வழியாக கேரளாவிற்கு செல்லக்கூடிய சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளாவிற்கு தொடர்ந்து ஹவாலா பணம் கடத்தப்படுவதும் அதனை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.