கோயம்புத்தூர்: கோவையில் இரு சக்கர வாகனம் உரசிய விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட இளைஞரை மற்றொரு தரப்பினர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, குனியமுத்தூரை அடுத்த சுண்ணாம்பு கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) அன்று தனது இருசக்கர வாகனத்தை குனியமுத்தூர் பகுதியில் ஓட்டிச் சென்றார். அப்போது அசாருதீனின் வாகனம் மற்றொரு வாகனத்தில் உரசி உள்ளது. இதனால் மற்றொரு வாகனத்தில் வந்த அசார் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு (ஏப்ரல் 7) அசாருதீனை அழைத்த அசார் தரப்பினர் நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பேச அழைத்துள்ளார்.
அதன்பேரில் அசாருதீன் தனது நண்பர்கள் மூன்று பேரை அழைத்துக் கொண்டு குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதிக்கு சென்றார்.அப்போது அங்கு அசார் தனது நண்பர்கள் 10 பேருடன் வந்துள்ளார். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் முகமது அசாருதீனின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு அசார் தரப்பினர் தப்பி ஓடியுள்ளனர்.
இதையும் படிங்க: "ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் கிடைக்குமா?" எம்எல்ஏ-வின் கேள்விக்கு அவையில் அமைச்சர் அளித்த அசத்தல் பதில்!
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அசாருதீனை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 8) அதிகாலை சிகிச்சை பலனின்றி அசாருதீன் உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் கத்தியால் குத்திய அசார், மன்சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன், முகமது ரபீக் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
கோவையில் இருசக்கர வாகனங்கள் உரசியது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சென்ற நபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு சக்கர வாகனத்தை உரசியதால் பிரச்சனை ஏற்பட்டு கொலை சம்பவம் நிகழ்ந்ததா ? அல்லது இளைஞர்களுக்கும் வேறேதேனும் பிரச்சனை இருந்து வந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்