தேனி: முல்லை பெரியாற்றில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினர், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப் பெரியாற்றில், தற்போது அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மற்றும் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல், சிலர் ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குச்சனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முல்லை பெரியாற்றின் மடைக்கு மேல் உள்ள பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தண்ணீரின் வேகம் திடீரென அதிகரித்ததால், எதிர்பாராத விதமாக இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதனைக் கண்ட சிலர், கணவரை உடனடியாக மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, எப்படியோ நீரின் ஓட்டத்தில் இருந்து தப்பிய அப்பெண், பாலத்தின் அடியில் உள்ள சிறிய மேட்டுப்பகுதியில் அமர்ந்து கொண்டார். நீரின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இடுக்கியில் மற்றொரு 'மஞ்ஞும்மெல் பாய்ஸ்' சம்பவம் - அதிர்ஷ்டவசமாக இளைஞரை மீட்ட உள்ளூர்வாசிகள்! |
அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஆற்றின் நடுப்பகுதியில் சிக்கித் தவித்த பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், தண்ணீர் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால், அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் ஆற்றின் குறுக்கே கயிற்றை கட்டி, அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை நிலவரப்படி தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதிக்கு சுமார் 1,208 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதில், தண்ணீர் இழுவை தன்மை வழக்கத்தை விட அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி, குளிப்பது போன்ற அலட்சியமான செயல்களால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்