சென்னை: பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பெண் ஐடி ஊழியரை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரின் செயல் ஓஎம்ஆர் சாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர் வாடகை வீட்டில் தங்கி ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு (மே 13) இளம் பெண் பணியை முடித்துவிட்டு வழக்கம் போல வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து சென்று உள்ளார்.
அலறிய பெண்
இதையடுத்து அந்தப் பெண் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்த போது அந்த இளைஞர் பெண்ணின் கையை பிடித்து இழுத்து வாயை பொத்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அந்த இளைஞரின் கையை கடித்து விட்டு கூச்சலிட்டு உள்ளார். இதனால் இளைஞர் அப்பெண்ணை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

பெண்ணின் கூச்சலை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து இளம்பெண்ணை மீட்டு அவரை தேற்றியுள்ளனர். பின்னர் இது குறித்து அவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
'தெரியாமல் செய்துவிட்டேன்'
இதையடுத்து இன்று அதிகாலை சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் (24) என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் '' குடிபோதையில் இது போன்ற செயலில் தான் செய்துவிட்டேன். என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை, தெரியாமல் செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்'' என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவர் கடந்த மூன்று மாதங்களாக சென்னையில் தங்கி ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவிக்கு வீடு புகுந்து பாலியல் தொந்தரவு: விசிக தொழிற்சங்க நிர்வாகி கைது!
இதையடுத்து போலீசார் அவர் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக போலீசார் பிடிக்க முற்பட்ட போது யோகேஸ்வரன் தப்பி ஓடி கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவருக்கு அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து யோகேஸ்வரனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஐடி ஊழியர்கள் அதிக அளவில் செல்லும் ஓஎம்ஆர் சாலையில் இரவு ரோந்து பணிகளை போலீசார் அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் ஓஎம்ஆர் சாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.