சேலம்: ஏற்காடு பள்ளி மைதானத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு லாங்கில்பேட்டை கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அபிஷேக் (14). தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து முடித்த அபிஷேக்கை நேற்று மாலை முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தார் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்திருந்தனர். மேலும், மாணவரை காணவில்லை என்று ஏற்காட்டில் உள்ள அனைத்து வாட்ஸ் ஆப் குழுக்களில் நேற்று இரவு முதல் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அபிஷேக் தான் படித்த பள்ளி மைதானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது இன்று காலை தெரிய வந்தது. இது குறித்து விசாரித்ததில் பள்ளி படிப்பிற்கு பிறகு மேற்படிப்பு என்ன படிப்பது? என்பது குறித்து மாணவர் அபிஷேக்கிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பெற்றோர் 11 ஆம் வகுப்பு படிக்க கூறியதாகவும், அதற்கு அபிஷேக் தொழிற்பயிற்சி படிப்பதாக கூறியதால் வீட்டில் வாக்குவாதம் முற்றியதால் கோபித்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் குடும்பத்தினர் சிறுவனை நேற்று இரவு முழுவதும் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவர் அபிஷேக் பள்ளி மைதானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவர்கள் குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏற்காடு போலீசார் சிறுவன் அபிஷேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஏற்காடு அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்காட்டில் பிரேத பரிசோதனை மையம் கட்டப்பட்டு இருந்தும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தும் ஏன் செய்ய முடியாது? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மக்களிடமும் மருத்துவரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இங்கேயே பிரேத பரிசோதனை செய்வதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மகனின் சடலத்தைப் பார்த்த அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மனஅழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.