தேனி: தனது கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க போலீசார் மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவர் சாலையோர கடை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது சகோதரர் பிரபுவிற்கும் பூர்வீக வீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி இவர்களது பூர்விக வீட்டிற்கு சென்ற பாபுவின் மனைவி முத்துலட்சுமியை பிரபு தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த பாபு பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதனால் பாபு மற்றும் பிரபு இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பிரபு தாக்கியதில் பாபுவிற்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தன்னை தாக்கிய தனது சகோதரர் பிரபு மீது பாபு தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார், புகார் அளித்து ஐந்து நாட்கள் மேல் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் பிரபுவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார். இதனால், பாபாபுவின் மனைவி முத்துலட்சுமி தனது மகள், மகனுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை... பொதுமக்கள் செய்த சம்பவம்! நடந்தது என்ன? |
பின்னர், அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானம் செய்தனர். இதற்கிடையே, தங்களது பூர்வீக வீட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனது கணவரின் சகோதரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் அவர் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, அவரின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவரிடம் உறுதியளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் தேனி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.