தஞ்சாவூர்: தஞ்சை பெரியக் கோயிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு மட்டும் இன்றி பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராஹி, சுப்பிரமணியர், நடராஜர் என தனி தனி சன்னதிகள் உள்ளன. கோயில் முழுவதும் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படும்.
அதன் படி கோயில் வளாகத்தில் உண்டியல் எண்ணும் பணி கடந்த ஜூன் 9-ந் தேதி நடைப்பெற்றது. இந்த பணியில் கோயில் பணியாளர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் உண்டியல் பணம் எண்ணும் பணி கண்காணிக்கப்பட்டது. பணம் எண்ணும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திரா என்ற பெண் யாரும் பார்க்காத வகையில், 500, 200, 100 ரூபாய் நோட்டுகளை லாவகமாக எடுத்து தனது மடியில் ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அந்தப் பெண் பணத்தை எண்ணுவதற்காக மறைவான இடத்தை நோக்கி சிறு தூரம் நடந்து சென்றார். அப்போது சில ரூபாய் நோட்டுகள் சிதறி கீழே விழுந்துள்ளன. அதை பார்த்த கோயில் ஊழியர் வீரமணி அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பணத்தை திருடிய பெண் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த இந்திரா (60) என்பதும், உண்டியல் காணிக்கையில் இருந்து ரூ.25,780 அவர் திருடியதும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: மசாஜ் சென்டருக்கு போன கணவன் இப்படியா வரணும்? அதிர்ந்த மனைவி.. சென்னையில் அரங்கேறிய கொடுமை!
மேலும், இவர் தன்னார்வலராக சேர்ந்து முதல் முறையாக பெரிய கோயிலில் காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனை அடுத்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து இந்திராவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சுமார் 25 ஆயிரத்து 780 ரூபாய் பணத்தை இந்திராவிடம் இருந்து மீட்ட காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.