திருநெல்வேலி: 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் முன்பாக, திமுக அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு எதிராக பேசியதை நினைவில் கொண்டு ஓட்டுப்போட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முன் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "கடந்த 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்னை சென்றபோது அப்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா எனக்கு வாய்ப்பளித்தார். 25 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர். ஆனால் அரசியல் சாசன சபையில் காங்கிரஸ் அம்பேத்கருக்கு உரிய இடத்தை கொடுக்கவில்லை. தமிழகத்தில் அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளை கம்பிக்கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கின்றனர். இப்படி தலைவர்களின் சிலைகளை சுற்றி அமைத்துள்ள கூண்டுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: சுற்றுலா பயணிகள் கவனத்துக்கு; குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல 5 நாட்கள் தடை!
அதிமுக-பாஜக கூட்டணி எந்த இழுபறியும் இல்லாமல் இயல்பாக அமைந்துள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. கூட்டணி ஆட்சி அமைந்தால் யாருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இப்போதைக்கு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
அமைச்சர் பொன்முடி அண்மையில் பேசிய ஓர் விஷயம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறானது. அவரது பேசியது சரியா என்பது குறித்து தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மட்டுமல்லாது, ஆண்களும் முடிவு செய்ய வேண்டும். பெண்களை தவறாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை நினைத்துப் பார்த்து 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக இதுவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மு.க.ஸ்டாலின் தயங்குகிறார். போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியத் துறை என்பதால் அரசு எடுத்து நடத்துகிறது. போக்குவரத்துத் துறையில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்," என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.