குன்னூர்: குன்னூர்-உதகை இடையிலான மலை ரயில் பாதையில் காட்டெருமைகள் கூட்டமாக நடமாடியதால், மலை ரயில் இயக்கப்படுவது சிறிது நேரம் தடைபட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் வனப் பகுதிகளின் வழியே அமைக்கப்பட்டுள்ள ரயில்பாதையின் வழியே செல்கிறது. மலை ரெயிலில் செல்லும் போது இயற்றை காட்சிகள், நீர்வீழ்ச்சி, மலை முகடுகள், வனவிலங்குகள் ஆகியவற்றைக் காண முடியும்.
மேலும் வளைந்து நெளிந்து குகைகள் வழியாக மலை ரயில் பயணிக்கும் போது திடீரென இருள் சூழ்வதும், திடீரென வெளிச்சம் வருவதுமான சூழல்கள் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. எனவே, சுற்றுலாப் பயணிகள் மலை ரயில்களில் பயணம் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மலை ரயிலில் பயணிக்க நாள்தோறும் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மலை ரயிலானது, வெலிங்டன் அரவங்காடு, கீர்த்தி, லவ்டேல் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது
இதையும் படிங்க: தலைமைச் செயலகம் வந்த கமல் ஹாசன் - முதல்வர் ஸ்டாலினுடன் பேசியது என்ன?
இந்த நிலையில், இன்றும் வழக்கம் போல குன்னூரில் இருந்து கிளம்பிய மலை ரயில் வெலிங்டன் ரயில் நிலையம் சென்ற போது, ரயில் பாதையில் காட்டெருமைகள் கூட்டமாக நின்றிருந்தன. ஓட்டுநர் எச்சரிக்கை ஒலியை எழுப்பிய போதிலும் காட்டெருமைகள் ரயில் பாதையை விட்டு அகலவில்லை. எனவே, வேறு வழியின்றி நடு வழியிலேயே மலை ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலில் இருந்த பயணிகள் காட்டெருமைகளை தங்களது மொபைல் போனில் படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர்.
நீண்ட நேரம் கழித்தே காட்டெருமைகள் ரயில் பாதையில் இருந்து காட்டுக்குள் சென்றன. இதன் பின்னரே, மலை ரயில் கிளம்பி உதகைக்கு சென்றது. எனவே, வழக்கமான நேரத்தை காட்டிலும் தாமதமாகவே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரயில்வே துறையின் சார்பில் வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. காட்டெருமைகள் நடமாடிய இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அங்கிருந்து காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். மேலும் காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். காட்டெருமைகள் தென்பட்டால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படியும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.