கோயம்புத்தூர்: கூலி உயர்வு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி கடந்த மாதம் 19 ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறியாளர்கள் கடந்த பத்தாம் தேதி முதல் 5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு பெற்றுக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காரணம்பேட்டை, சோமனூர், கருமத்தம்பட்டி, தெக்கலூர், புதுப்பாளையம், அவினாசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மருந்தகங்கள் தவிர அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதையும் படிங்க: ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானால் பதவி கிடைக்குமா? 'ஆருடம்' சொன்ன ஜெயக்குமார்!
இதனிடையே இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பிரேமா கோவை தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் சாந்தி, உதவி ஆணையர் ராஜ்குமார் ஆகியோர் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை,திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பூபதி, "மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நலத்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஐவுளிஉற்பத்தயாளர் கொடுப்பதாக சொல்வதற்கும் நாங்கள் கேட்பற்கும் இடைவெளி அதிகமாக உள்ளது. எனினும் 60 சதவீதம் கூலி உயர்வில் இருந்து கொஞ்சம் இறங்கி வந்திருக்கின்றோம். ஐவுளி உற்பத்தியாளர்கள் தரப்பிலும் கொஞ்சம் உயர்வு அளிப்பதாக சொல்லி இருக்கின்றனர். எனினும், கணிசமான உயர்வு இருந்தால் மட்டுமே தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். முடிவு எட்டப்படும் வரை விசைத்தறியாளர் வேலைநிறுத்தம் தொடரும். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து நிர்வாகிகளுடன் கூடி ஆலோசிப்போம். நாங்கள் கேட்டதும் அவர்கள் கொடுப்பதாக சொல்லி இருப்பதையும் இப்போது சொல்ல முடியாது,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.