ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் இருந்து டீசல் திருடியதாக வடமாநில இளைஞர் ஒருவரை லாரி ஓட்டுநர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வள்ளுவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா. இவருக்கு சொந்தமான லாரி நேற்று இரவு (மே 18) சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் நோக்கி செல்லும் மார்க்கத்தில் நின்று கொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் இந்த லாரிக்கு முன்பு லாரி ஒன்று சந்தேகத்திற்கிடமாக வந்து நின்று விட்டு சென்றுள்ளது. அதன் சிசிடிவி காட்சிகளை பார்த்த உரிமையாளர் பாரதிராஜா, தனக்கு தெரிந்த நண்பர்கள் சிலருடன் காரில் சுமார் 50 கிமீ தூரம் துரத்தி சென்று வேலூரை அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் வைத்து அந்த லாரியை பிடித்துள்ளனர்.

அங்கு பாரதிராஜாவை கண்டதும் லாரியிலிருந்த இருவர் தப்பியோடிய நிலையில், வடமாநில இளைஞர் சந்தீப் யாதவ் (28) இவர்களிடம் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து பாரதிராஜா மற்றும் சிலர் வடமாநில இளைஞரை அடித்து லாரியில் கைகளை கட்டியவாறு அழைத்து வந்து வி.சி.மோட்டூரில் வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது லாரியில் ஏராளமான கேன்களில் டீசல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கு.. நடுநடுங்க வைக்கும் பின்னணி.. தேங்காய் உரிப்பவர்கள் போட்ட குரூர ஸ்கெட்ச்!
இந்த நிலையில் லாரி மீது சந்தேகம் வந்தவுடன் உரிமையாளர் பாரதிராஜா, காவல் நிலையத்திற்கு புகார் அளிக்காமல் தன்னிச்சையாக 50 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று லாரியை பிடித்து வந்ததற்கான நோக்கம் என்ன? அதே போல வடமாநில இளைஞரை கண்மூடித்தனமாக தாக்கி கையை கட்டிப் போட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தது மனித உரிமை மீறல் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அது மட்டுமின்றி, வடமாநில இளைஞரை விண்ணம்பள்ளி அருகே உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல், சுமார் 50 கிலோமீட்டர் தூரம் அழைத்து வந்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது ஏன்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.