விருதுநகர்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (76). இவர் தனது குடும்ப உறுப்பினர்களான 9 பேருடன் அவருக்குச் சொந்தமான காரில் ஆன்மீக சுற்றுலாப் பயணமாக ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர் குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் உள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு கன்னியாகுமரி சென்றுள்ளார்.
தொடர்ந்து, கன்னியாகுமரியில் இருந்து சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அவர்களது சொந்த ஊரான தெலுங்கானாவிற்கு நேற்று (ஏப்ரல் 14) காரில் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக விருதுநகர் - சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், இனாம்ரெட்டியாபட்டி சந்திப்பில் வரும் பொழுது பிரகாஷ் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இரும்பு தடுப்பு கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த விபத்தில் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான பிரகாஷ் (76), அகல்யா ராணி (65), சந்தோஷ் குமார் (51), சுமலதா (40), சுகுணா ( 55) லலிதா (52) ஜெயஸ்ரீ ( 50) மற்றும் ஒரு 9 வயது சிறுமி ஆகியோர் காயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு அருகிலிருந்த விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதில், தலையில் பலத்த காயம் அடைந்த அகல்யா ராணி (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் மற்றொரு 9 வயது சிறுமி காயங்களின்றி விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், நேற்று விருதுநகர் காரிசேரி கிராமத்தில் மைக் செட் அமைத்தபோது, மேலே இருந்த உயர் மின்னழுத்த கம்பி, மைக் வயர் மீது எதிர்பாராத விதமாக உரசி ஏற்பட்ட விபத்தில் கணவன், மனைவி, அவரது வயிற்றில் இருந்த 7 மாத சிசு மற்றும் கணவனின் பாட்டி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்வாறு விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அடுத்தடுத்த விபத்து சம்பவங்களால் பெரும் பரபரப்பு நிலவியது. தற்போது, இருவேறு சம்பவங்களில் குடும்பத்துடன் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.