விழுப்புரம்: பழுதுபார்க்கப்பட்ட செல்போனுக்கு பணம் கேட்ட கடையில் பெட்ரோல் குண்டு வீசிச்சென்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள ரெட்டியார் மில் பகுதியில், ஜாகீர் உசேன் என்பவருக்குச் சொந்தமான ‘பானு மொபைல்ஸ்’ எனும் செல்போன் பழுதுபார்க்கும் கடை உள்ளது. இங்கு ரீசார்ஜ் சேவைகளும், மொபைல் உதிரிபாகங்கள் விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அருண்குமார் (23) எனும் இளைஞர், தன் மொபைலில் பிரச்சினை உள்ளது; அதை சரிசெய்து தர வேண்டும் என்று ஜாகீரிடம் கோரியுள்ளார்.
இவர் கடையின் அருகே உள்ள மகாராஜபுரத்தில் வசித்துவரும் கோவிந்தன் என்பவரது மகன் ஆவார். இதே கடையில் தன் மொபைல் போனை பலமுறை அருண் சரிபார்த்துள்ளதாக கடை உரிமையாளர் தரப்பில் கூறப்படுகிறது.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்நிலையில், கடையில் கொடுத்த போனை வாங்க வந்தவரிடம், உரிமையாளர் 200 ரூபாய் கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், ‘பணம் எல்லாம் தரமுடியாது’ என அருண் கூறிவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை கடையின் உள்ளே வீசினார்.
இதில் பதற்றமடைந்த கடை உரிமையாளர், வெளியே ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சில், கடையில் இருந்த விலை மதிப்புள்ள பல மொபைல் உதிரிபாகங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது என கடை உரிமையாளரின் தந்தை அன்சார் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.
பெட்ரோல் குண்டு வீசியபோது, அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்ததால், அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்துள்ளனர். அப்போது, அருண் வெளியே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நண்பருடன் தப்பியோடி உள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது ஜாகீர் உசோனின் சகோதரரும் உடன் இருந்துள்ளார்.
கடை உரிமையாளர் தரப்புப் பேட்டி
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஜாகீரின் தந்தை அன்சார், “ஐந்து பெட்ரோல் குண்டுகள் எடுத்து வந்து வீசினார். இரண்டு வெடிக்கவில்லை. செல்போன் பழுதுபார்த்த பணத்தை கேட்டதற்காக இதை செய்தார். இவர் முன்னதாக ரீசார்ஜ் செய்த பழைய பாக்கியும் தரவில்லை.
இதையும் படிங்க |
இங்கு வந்து பெட்ரோல் குண்டு வீசுவதற்கு முன்னதாக, பக்கத்தில் இருக்கும் ஆம்பூர் பிரியாணி கடைக்கும் சென்று மிரட்டியுள்ளார். என்னிடம் மிரட்டியபோது சும்மா சொல்கிறார் என்று தான் நினைத்தேன். ஆனால், சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார்.” என்று கூறினார்.

குண்டெறிந்தவர் கைது
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்தவர்கள், தடயங்களை சேகரித்துவிட்டு வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குற்றச்செயலில் ஈடுபட்ட அருணை தேடி வந்தனர். அதிரடி தேடுதல் வேட்டையில் அருணை கைது செய்த காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஏன், அவர் இந்த செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, முன்விரோதம் காரணமாக கடையில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார் எனத் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.