தருமபுரி: தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடை அடுத்த வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டமாகும். சுமார் 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதில் பங்கேற்றுள்ளனர்.
முதன்முறையாக தருமபுரியில் தேமுதிக பொதுக்கூழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய பிரபாகரன் கட்சியில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருப்பினும் அவருக்கு கட்சிப் பதவி ஏதும் வழங்கப்படாமல் இருந்த நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, விஜய பிரபாகரனுக்கு தற்போது இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், 2026 தேர்தலில் தேமுதிக, அந்தக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுமா? அல்லது வேறு கூட்டணிக்கு செல்லுமா? என்ற எதிர்பார்ப்புக்கும் இன்றைய பொதுக் குழுக் கூட்டத்தில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு - கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
மேலும், தேமுதிகவில் எல்.கே.சுதீஷின் கட்சிப் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வந்த அவர், அக் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிகவை பலப்படுத்துவது மற்றும் புதிய பொறுப்பு வழங்குவது, 2026 தேர்தலை எவ்வாறு சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தால் பாலக்கோடு பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.