ஈரோடு: ஈரோட்டில் மின் தடையை சரி செய்ய வயர்மேன் லஞ்சம் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் மின் மோட்டார் மூலம் கிணற்றில் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்து வருகின்றனர். அண்மை காலமாக தாளவாடி பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மின் கம்பங்களில் பழுது ஏற்பட்டு விவசாயிகளுக்கு மின்தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையை பழுது நீக்கி சரி செய்வதற்கு மின் வயர்மேன் பேரம் பேசி லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே தாளவாடி பாரதிபுரத்தைத் சேர்ந்த விவசாயி செந்தில் என்பவர் தோட்டத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியத்திடம் புகார் தெரிவித்தார். அங்கு வந்த வயர்மேன் மணிகண்டன் மின் தடையை நீக்கி சரி செய்வதற்கு ரூ.1500 லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு செந்தில் ரூ.1000 லஞ்சமாக கொடுக்கும் போது அதனை பெற்றுக் கொள்ளும் மணிகண்டன், மேலும் ரூ.500 கேட்கும் வீடியோவும், பின்னர் மின்தடையை சரி செய்ய மின் கம்பத்திற்கு செல்லும் காட்சியும் தற்போது தாளவாடி பகுதியில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் வயர்மேன் மணிகண்டனிடம், விவசாயி செந்தில் 500 ரூபாய் குறைவாக உள்ளதாகவும், தற்போது மின்வெட்டு பிரச்சனையை சரி செய்யுமாறும் மீதம் பணத்தை பின்னர் தருவதாகவும் கூறுகிறார். இதனையடுத்து வயர்மேன் மணிகண்டன் மின் கம்பத்தில் ஏறி மின் தடை பிரச்சனையை சரி செய்ய செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வனப்பகுதியில் கடும் வறட்சி: மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் புள்ளி மான்கள்!
இது குறித்து சத்தியமங்கலம் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, தாளவாடியில் மின் தடையை சரி செய்ய வயர்மேன் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வைலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பின் குற்றம் உண்மை என தெரிய வந்தால் வயர்மேன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்