வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா இறையவன்காடு ஊராட்சி எல்லையில் காட்டுக்கொல்லை என்ற கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 5 தலைமுறையாக மக்கள் வசித்து வருவதாக கூறுகின்றனர். இந்த நிலையில் காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள 300 வீடுகள் அமைந்துள்ள இடம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்றும், அங்கு இனிமேல் குடியிருக்க வாடகை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு உரிமையாளர்களுக்கு விரிஞ்சிபுரம் ஹசரத் சையத் அலி சுல்தான்ஷா தர்ஹா சார்பில் நோட்டீஸ் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அளிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் பொதுமக்களிடம் பேசியதோடு இந்த விவகாரம் குறித்து வேலுார் ஆட்சியர் சுப்புலட்சுமியை சந்தித்து கடந்த 11 ஆம் தேதி மனு ஒன்றையும் அளித்தனர். அந்த மனுவில், ''நாங்கள் 5 தலைமுறைகளை கடந்து வசித்து வருகிறோம். எனவே நாங்கள் வசிக்கும் வீடுகள் எங்களுக்கு மட்டுமே சொந்தம்.." என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு விரிஞ்சிபுரம் ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்ஹா தரப்பில், 'மேற்குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் எல்லாம் 1959 ஆம் ஆண்டு முதல் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது. அதற்கான ஆவணங்கள் உள்ளன.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த மலர்வேணி கூறும் போது, ''5 தலைமுறைகளாக நாங்கள் வசித்து வருகிறோம். இப்போது நாங்கள் இருக்கும் இடம் வக்ஃப்க்கு சொந்தமானது என்று தர்ஹா தரப்பில் திடீரென நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதை எப்படி ஏற்பது? இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
இது தொடர்பாக இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கூறும் போது, ''இங்கு கோயில் இருக்கும் போது எப்படி வக்ஃப்க்கு சொந்தமான இடம் என்று சொல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதே சமயம், ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்காவின் முத்தவல்லி சையத் சதாம் கூறும் போது, ''காட்டுக்கொல்லை கிராமத்தில் 2 சர்வே எண்ணுக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் சொத்துகள் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது. அவை ஆக்கிரமிப்பில் உள்ளன. இதற்கான பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் இருக்கிறது.
இந்த இடம் கடந்த 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்போது புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி வக்ஃப் சொத்துக்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.'' என்று தெரிவித்தார்.
காட்டுக்கொல்லை கிராமத்திலுள்ள இந்த இடம் யாருக்கு சொந்தமானது? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கோர்த்துவிட்ட 'சாட்டை'... கழற்றி விட்ட சீமான்; பரபரப்பை கிளப்பும் பின்னணி!
இதுதொடர்பாக வேலுார் கலெக்டர் சுப்புலட்சுமி கூறும் போது, ''இறையவன்காடு நில பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் இரண்டு தரப்பினரிடமும் நிலம் குறித்து, அவர்களிடம் இருக்கிற ஆவணங்களை பெற்று விசாரிக்க பணித்திருக்கிறோம். மாவட்ட வருவாய் அலுவலரின் அறிக்கை பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுப்போம்." என கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்