சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாக மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றதற்காக முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பாஜக அல்லாத கட்சிகள் ஆளுகின்ற பிற மாநிலங்களில் ஆர்.என்.ரவி போன்ற ஆளுநர்கள் இனி நெருக்கடி கொடுக்க முடியாது. மாநில அரசுகளை முடக்க முடியாது என்பதை செவிலில் அறைந்து பாடம் புகட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது," என்று தெரிவித்தார்.
செவிலில் அறைந்து பாடம் புகட்டிய உச்ச நீதிமன்றம்
தொடர்ந்து பேசிய அவர், "உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே ஒளி கொடுக்கும் மகத்தான தீர்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டிய 10 மசோதாக்களை ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் எங்களுக்கு வேறு வழியில்லை எனக் கூறி, அந்த மசோதாக்களைச் சட்டமாக்கி உத்தரவிட்டுள்ளது.
" உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்தியாவுக்கே ஒளியூட்டக் கூடிய தீர்ப்பு; ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டியிருக்கிற தீர்ப்பு"
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 9, 2025
இன்று செய்தியாளர் சந்திப்பில்... pic.twitter.com/gZ6Rba2xqF
செவிலில் அறைந்து பாடம் புகட்டும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி, அதன் மூலம் அவருக்குப் பாடம் புகட்டியுள்ளது. ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் வளர்ந்த ஆர்.என்.ரவி இதுபோல முட்டுக்கட்டை போடுவதன் மூலம், திமுக அரசை நெருக்கடிக்குள்ளாக்க முடியும், செயலிழக்க வைக்க முடியும் என நம்பினார். தமிழ்நாடு அவருக்கு தோதான மண் இல்லை என்பதை நிரூபித்து வருகிறோம். நாகாலாந்தில் செய்ததை போல தமிழ்நாட்டில் செய்ய முடியாது என்பதை ஆளுநர் ரவி உணர்ந்திருப்பார். இது முதலமைச்சருக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி." என்று திருமாவளவன் கூறினார்.
நீட் பிரச்னைக்கும் அகில இந்திய கூட்டம்
மேலும் பேசிய அவர், "நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார் என நம்புகிறோம். தொகுதி மறுவரையறைக்குச் செய்தது போல், பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ளவர்களை அழைத்து அகில இந்தியக் கூட்டத்தை நடத்தி, நீட் பிரச்னைக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரப்படும் இடஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இதனை அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம்.
பாஜகவின் தயவுக்காக மக்கள் ஆதரவை இழக்கும் அதிமுக
நீட் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காததன் மூலமாக தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அதிமுக விலகி நிற்கிறது. அவர்களே சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கருத வேண்டும். பாஜகவின் தயவு வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை இழக்கும் நிலைப்பாட்டை அதிமுக எடுத்து வருகிறது. நாட்டுக்கே தெரியும் இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து எத்தனை முறை நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளது என்பது.
இதையும் படிங்க: "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தூக்கம் போனது" - மனம் திறந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்! |
இதனைத் தாண்டி ஒரு மாநில அரசால் என்ன செய்ய முடியும் என்பதை அதிமுக விளக்க வேண்டும். மீண்டும் நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் கூறியுள்ளோம்," என்று திருமா தெரிவித்தார்.
விரக்தியில் பேசும் அதிமுக
பின்னர், "திமுக கூட்டணிக் கட்சிகள் காற்றோடு கரைந்துவிடுவார்கள்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இது விரக்தியின் வெளிப்பாடு, திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என 'இலவு காத்தக் கிளி போல' காத்திருந்தனர். தற்போது அவர்கள் நினைத்தது நடக்கவில்லை என்பதால் விரக்தியின் விளைவாக இபிஎஸ் இப்படி பேசி வருகிறார்," என்று திருமாவளவன் பதிலளித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.