திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் முதன்முறையாக சாமி தரிசனம் செய்தார்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கமாக இருக்கிறது. மாதம் தோறும் பெளர்ணமி தினத்தன்று திருவண்ணாமலைக்கு லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அப்போது திருவண்ணாமலை மலையைச் சுற்றி லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதும் வழக்கமாகும். கார்த்திகை தீப திருவிழா, சித்ரா பெளர்ணமி திருவிழா ஆகியவை இங்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.
அண்ணாமலையார் கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரமுகர்களும் வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலையில் விடுதலை கட்சிகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விசிக இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை மாநில துணைச் செயலாளர் மக்கா கலில் திருமண நிகழ்வில் பங்கேற்றார். இதன் பின்னர் தமது கட்சியினருடன் அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "பாமகவுக்கு இனி நானே தலைவர்!" - அன்புமணி பதவியைப் பறித்த ராமதாஸ்!
இதனைத் தொடர்ந்து அவர் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபட்டார். மேலும் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், நவகிரகம் ஆகிய சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். திருமாவளவன் கோயிலுக்கு வந்த போது அங்கு வந்த பள்ளி மாணவர்கள், அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். திருமாவளவனுடன் விசிக முதன்மைச் செயலாளர் ஏ.சி பாவரசு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் நியூட்டன், விழுப்புரம் மண்டலம் செயலாளர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து திருமாவளவனுக்கும், அவருடன் வந்த ஆதரவாளர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பிராசதங்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.
இது குறித்து தமது எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள திருமாவளவன், "இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை வந்த போது காலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றேன்,"என்று கூறியுள்ளார். தொல்.திருமாவளவன் முதன் முறையாக அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ததாக அவரது கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.