சென்னை: சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் பையில் அரிவாளுடன் வருவது ஒரு நல்ல அறிகுறி இல்லை. 13 வயது சிறுவன் புத்தகம் வைக்க வேண்டிய பையில் அரிவாள் வைக்கிறான். வகுப்பறையில் ஆசிரியர்கள் முன்னிலையில் இன்னொரு மாணவனைத் தாக்குகிறான். அதனைத் தடுக்கும் ஆசிரியரை வெட்டுகிறான் என்பது கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அந்த 13 வயது சிறுவனுக்குப் படிப்பதை விட, வன்முறை செயல்களில் நாட்டம் உருவாகியுள்ளது. இதற்குக் காரணம் அவன் மட்டுமல்ல இந்த சமூக கட்டமைப்பும் தான் காரணம். அண்மை காலமாகச் சாதி குறித்த பெருமிதம் அதிகமாகப் பேசப்படுகிறது. வீர பரம்பரை, ஆண்ட பரம்பரை என்று பேசப்படுகிறது.
“மாணவர்களிடையே சாதிய உணர்வைத் தூண்டுகின்றனர்”: நாடு முழுவதும் சாதியவாதமும், மதவாதமும் வெளிப்படையாகப் பேசப்படுகிறது. சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளங்களில் இந்த நஞ்சு திட்டமிட்டு விதைக்கப்படுகிறது. ’ஜெய் ஸ்ரீ ராம்’ போன்ற முழக்கங்கள் கற்பித்துத் தருகிறார்கள். ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை என்ற நஞ்சுகளைப் பிஞ்சுகளின் மனதில் விதைக்கிறார்கள். இதற்கு பாஜகவால் ஒன்றும் சொல்ல முடியாது. இது போன்ற சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பார்கள் அவ்வளவுதான்.
சாதியவாதி அமைப்புகளால் சாதி அடையாளங்கள் உள் கயிறு கட்டுவது, சைக்கிளில் சாதி அடையாளங்கள் வைப்பது, சாதி சார்ந்த முழக்கங்களை எழுப்புவது போன்ற செயல்களில் சாதி மற்றும் மதவாத உணர்வு தூண்டப்படுகிறது. பள்ளி மாணவர்களிடையே திட்டமிட்டு சாதிய உணர்வை வளர்க்கின்றனர்.
அன்று, நாங்குநேரி சின்னதுரை தாக்கப்பட்டார். இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் பள்ளிகளின் நிலவும் இது போன்ற கலாச்சாரங்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் முக்கியத்துவம் இப்பொழுது உணரப்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு நீதிபதி சந்துருவின் தலைமையிலான பரிந்துரையைப் பரிசீலிக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்த ஆவணம் செய்ய வேண்டும் எனக் வலியுறுத்துகிறேன்.
பள்ளி மாணவர்களிடையே வளரக்கூடிய சாதிய மதவாத வன்முறைகள் மிகவும் ஆபத்தானது. அதைத் தமிழக அரசு கவனித்து ஒரு தடுப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் அரசிற்கும் பொறுப்பு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியமானது. ஆனால், ஒட்டு மொத்தமாக அரசு மட்டுமே பொறுப்பு என்ற தோற்றத்தை உருவாக்குவது ஏற்புடையது அல்ல.
மாநில சுயாட்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மாநில சுயாட்சி கோரிக்கைக்கு மீண்டும் வலுசேர்க்கும் வகையில் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். மாநில சுயாட்சி குறித்து மாநாடு நடத்தியுள்ளோம். அப்போது, எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதையும் படிங்க: நெல்லை பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: புத்தகப் பையைச் சோதனை செய்து அனுமதிக்கும் நிர்வாகம்! - |
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசை தன் விருப்பம் போல் ஆட்டிப்படைக்க முயன்றார். சட்டப் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் போட்டார். இதனால், 10 பல்கலைக்கழக மசோதாக்களையும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சட்டமாக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் மாநில அரசிற்கும் மத்திய அரசிற்கும் இடையிலான உறவு, மாநில சுயாட்சி தொடர்பாக குழு அமைக்கப்பட்டிருப்பது சிறப்புமிக்க நிகழ்வு இது இந்தியாவிற்கே வழிகாட்டுதலாக அமையும் என்று திருமாவளவன் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.