தஞ்சாவூர்: திமுகவுக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், நான் வளைந்து கொடுப்பேன்; ஆனால் யாரும் என்னை உடைக்கவோ, ஒடித்து விடவோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
நாளை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் புதிய ரயில்வே சாலையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது:
திமுகவிற்கு விசிக முட்டுக் கொடுக்கிறது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக என்கிற அரசியல் இயக்கம் கருணாநிதி தலைமையில் 5 முறை ஆட்சியில் இருந்த இயக்கம். இப்போது 6வது முறையாக ஸ்டாலின் தலைமையில் ஆளுங்கட்சியாக வீறுநடை போடுகிறது. எனவே, திமுகவுக்கு விசிக முட்டுக்கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அந்த அளவுக்கு திமுகவும் பலவீனமாக இல்லை.
திமுக வீழ்ந்தால் விசிகவும் வீழும்:
திராவிடர் கழகம், திமுக, இடதுசாரி, காங்கிரஸ் இயக்கங்களுடன் விசிக ஏன் இணைந்து பயணிக்கிறது என்றால் இந்த இயக்கங்கள்தான் ஜனநாயகத்தை பேசுகின்றன. முற்போக்கு அரசியலை பேசுகின்றன. சமூக நீதி அரசியலை பேசுகின்றன. சாதிய வன்கொடுகளை ஒழிக்க குரல் கொடுக்கின்றன. இந்த இயக்கங்கள் பலவீனப்பட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியலும் பலவீனப்படும். திமுகவை வீழ்த்துவோம் என்று கூறினால் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் வீழ்த்துவோம் என்பது தான் பொருள். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆசை வார்த்தைகளுக்கு மயங்கமாட்டோம்
தனிப்பட்ட முறையில் திமுகவை எதிர்த்து எந்த அரசியல் கட்சியாவது குரல் கொடுத்தால், அதனை திமுகவே எதிர்கொள்ளும். ஆனால், திமுகவும், விசிகவும் மேற்கொள்ளும் பொதுவான அரசியல் கோட்பாட்டை யாராவது எதிர்கிறார்கள் என்றால் அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. திமுகவை விட்டு வெளியே வாருங்கள்; உங்களுக்கு கூடுதல் தொகுதிகள் தருகிறோம். ஆட்சியில் பங்கு தருகிறோம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறினார்கள். ஆனால் விசிக ஒருபோதும் இத்தகைய சராசரி அரசியல் நடைமுறைக்கு இடம் கொடுக்கும் இயக்கம் கிடையாது. அத்தகைய ஊசல் ஆட்டத்தில் இருக்கிற இயக்கமும் விசிக அல்ல.
என்னை உடைக்க முடியாது
திருமாவளவன் வளைந்து கொடுப்பவன் தான். அதற்காக என்னை எளிதாக யாராலும் ஒடித்து விடவோ, ஒழித்து விடவோ, உடைத்தெறியவோ முடியாது என்பதை காலம் அவ்வப்போது உணர்த்தி இருக்கிறது. என்னை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி, திமுக கூட்டணியை உடைக்கலாம் என கணக்குப் போட்டவர்கல் எல்லாம் தோற்றுப் போனதுதான் வரலாறு.
எம்.பி., எம்எல்ஏக்கள் முக்கியம் அல்ல
எல்லா கதவுகளையும் மூடிவிட்டு நீ எப்படி திமுகவுடன் பேரம் பேச முடியும், எப்படி கூடுதல் இடங்களை பெற முடியும், அதிகாரத்திற்கு வர முடியும் என சிலர் கேள்வி கேட்கிறார்கள். விசிகவை பொறுத்தவரை, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அம்பேத்கரின் அரசியலே மகத்தானது என நினைக்கும் இயக்கம். அதை பாதுகாப்பதே நமது லட்சியம் என்று திருமாளவன் பேசினார்.
