விருதுநகர்: மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், கொலை வழக்கு ஒன்றில் விருதுநகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவர், ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்துள்ளார். இதனிடையே, இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த சூழலில், செந்தில்குமார் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரை வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள்தான் கொலை செய்தனர் என செந்தில்குமாரின் மனைவி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கானது, விருதுநகர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, விருதுநகர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன், விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பல கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி வரிச்சியூர் செல்வம். இவர் கோவையில் ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காக தனது ஆதரவாளர்களுடனும், ஆயுதங்களுடனும் சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சுட்டுபிடிக்க கோவை போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக நேற்று முன்தினம் (ஏப்.13) தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஒரு வழக்கு விசாரணைக்காக அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்