திருப்பத்தூர்: சாலையில் தவறவிடப்பட்ட பணத்தை மீட்டு உரியவரிடம் கொண்டு சேர்த்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாசம், 17 வருடங்களாக இந்த தொழிலில் இருந்து வருகிறார். பொதுவாக பிரகாசம் அதிகாலை முதல் மதியம் வரை ஆட்டோ ஓட்டிவிட்டு, பின் மாலையில் உணவுக்காக வீட்டுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று ஆட்டோவில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, கிரிசமுத்திரம் பகுதிக்கு சென்று இறக்கிவிட்டு விட்டு, பிரகாசம் வீடு திரும்பியுள்ளார்.
கிரிசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த அவர், சாலையோரத்தில் ஒரு துணிப்பை கிடப்பதை கண்டுள்ளார். வண்டியை நிறுத்திய பிரகாசம், பையை கையில் எடுத்து பார்த்துள்ளார். அப்போது அதில் ரூ.19,000 ரொக்கமும், ஒரு ஏ.டி.எம் அட்டையும் இருந்துள்ளது.
அவற்றை என்ன செய்வது? என அறியாமல் திகைத்து நின்ற பிரகாசம், சுதாரித்துக்கொண்டு அருகிலிருந்த வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய ஆய்வாளர் பேபியிடம் ஒப்படைத்தார். இதைப் பார்த்த காவல்துறையினர் பிரகாசத்தின் நேர்மை குணத்தையும், நல்ல மனதையும் வெகுவாக பாராட்டினர்.

இதுகுறித்து பேசிய பிரகாசம், “எனக்கு நிறைய கடன்கள் உள்ளன. நாளை நான் வாங்கிய கடன் தொகையை செலுத்த வேண்டும். செய்வதறியாமல் இருந்த நேரத்தில்தான் இந்த பணம் எனக்கு கிடைத்தது. ஆனால், எனக்கு இந்த பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில்லை.
யாரோ உழைத்துச் சம்பாதித்த பணம் இது. இது அவர்களுக்கு சொந்தமானது. இது உரியவர்களுக்கு முக்கியமான செலவுக்கு பயன்படப் போகும் பணமாக இருக்கலாம். அதனால், நான் இதை அவர்களிடம் ஒப்படைக்க விரும்பினேன்,” என்றார்.
இதையும் படிங்க: ''மேயர் உள்பட எந்த கவுன்சிலர்களும் மக்களை சந்திப்பது இல்லை'' - வெளுத்து வாங்கிய அமைச்சர் நாசர்! |
இதையடுத்து இந்த பணம் யாருடையது என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பாப்பனப்பல்லி பகுதியைச் சேர்ந்த நிரோஷா கையில் இருந்து பணம் தொலைந்தது தெரியவந்தது.

இவரது மகள் சுஷ்மிதாவுக்கு இன்று கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், நேற்றைய தினமே நிரோஷா கிரிசமுத்திரம் பகுதியில் இருந்த அடகுக் கடையில் தங்கநகையை அடகு வைத்துள்ளார். அதில் கிடைத்த ரூ.19,000 ரொக்க பணத்தை எடுத்துகொண்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, பணம் வைத்திருந்த பை தவறுதலாக சாலை விழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நிரோஷா கூறிய தகவல்களை காவல் ஆய்வாளர் உறுதி செய்தார். பின் அந்த பணத்தை நிரோஷாவிடம் ஒப்படைத்தார். அப்போது நிரோஷா நன்றி தெரிவித்துக்கொண்டு அந்த பணத்தைப் பெற்றுச் சென்றார். தொடர்ந்து காவல் ஆய்வாளர், ஆட்டோ ஓட்டுநர் பிரகாசத்துக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.