ETV Bharat / state

பெண்ணை முட்டி தூக்கிய காட்டு எருமை! சாலை, மின் வசதி இல்லாததால் விடியும் வரை காத்திருந்த கிராம மக்கள்!

சாலை, மின்சாரம் என அடிப்படை வசதியே இல்லை, இரவில் காயமடைந்தவரை காலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவல நிலை இருப்பதாக பாலகினார் பழங்குடியின கிராமம் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொட்டிலில் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்
தொட்டிலில் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 9, 2025 at 5:27 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: காட்டு எருமை தாக்கியதில் காயமடைந்த பெண், சாலை மற்றும் மின்சார வசதி இல்லாததால் விடிந்த பின் மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் வாழும் இவர்கள் சாலை, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையே அவ்வப்போது வன விலங்குகளும் ஊருக்குள் வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி செல்வதும் உண்டு.

இவ்வாறு வனப்பகுதியில் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கிராமங்களில் வசித்து வருகின்றன. அதில் சேக்கல்முடி பகுதியில் பாலகினார் ஆதிவாசி பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள். இவர் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக காட்டு எருமை ஒன்று தங்கமாளை நோக்கி ஆக்ரோஷமாக வந்து அவரை முட்டி தூக்கி வீசியது. அதில் அவர் படுகாயமடைந்து செய்வதறியாமல் கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள ஆதிவாசி பழங்குடியின மக்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். மின்சார வசதியில்லாத இருண்ட கரடுமுரடான பாதையில் ஆம்புலன்ஸை வர வழைக்க முடியாது என்பதால் விடிய விடிய அவர்களே வீட்டில் வைத்து முதலுதவி செய்தனர்.

பின், விடிந்த உடன் பாலகினார் செட்டில்மெண்ட் பகுதியிலிருந்து சேக்கல்முடி பகுதிக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு தங்கம்மாளை தொட்டிலில் கட்டி தூக்கிச் சென்றனர். பின், சேக்கல்முடி பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பினார்.

இதையும் படிங்க: கரூர் சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்!

இது குறித்து பேசிய கிராம மக்கள், “எங்கள் கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இரவில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூட முடியவில்லை. இதனால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அரசு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.