கோவை: செந்தமிழின் உதிரத்தில் இருந்து தான் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் உதித்தன என்று மனோன்மணியம் சுந்தரனார், நீராரும் கடலுடுத்த பாடலை பாடி இருக்கிறார். கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர், "மதிமுக சார்பில் ஜூன் 22-ல் ஈரோட்டில் பொதுக்குழு நடைபெறவுள்ளது. அடுத்த தேர்தல் வரையிலான திட்டங்களை, பொதுக்குழுவில் எடுத்து வைக்க இருக்கின்றோம்" என்றார்.
பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்ட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த்து குறித்து பேசிய அவர், "மிகவும் வேதனைக்குரியது. முன்கூட்டியே அரசு எவ்வளவு கூட்டம் திரளும் என்பதையும், விபரீத மரணங்கள் நிகழக் கூடும் என்பதையும் உளவுத்துறை யூகித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும். மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு வீர வணக்கம், இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்" என தெரிவித்தார்.
மேலும், "உலகில் இருக்கும் மொழியியல் வல்லுநர்கள், மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டவர்கள் மூத்த மொழி தமிழ் தான் என சொல்லி இருக்கின்றனர். வடமொழி, கிரேக்கம், லத்தின், எகிப்தியர் பேசிய மொழி போன்றவற்றை விட மிக தொன்மையானது தமிழ் மொழி என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தான் நீராடும் கடலொடுத்த பாடலை மனோன்மணியம் சுந்தரனார் இயற்றினார். அதில் செந்தமிழின் உதிரத்தில் இருந்து தான் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் உதித்தன என பாடி இருக்கின்றார்.
சமஸ்கிருதத்தில் இருந்து அனைத்து மொழிகளும் வந்தன என்று மத்திய அமைச்சர் அமித்ஷா ஆணவத்துடன் பேசுகிறார். ஆனால் அந்த மொழியை 24,000 பேர் மட்டும் தான் பேசுகின்றனர். செம்மொழி என்பதற்காக சொல்லவில்லை, உண்மை என்பதற்காக சொல்கின்றோம்.
கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை. வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள், கன்னடர்களை தமிழர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் தூண்டி விட்டது போதும். தமிழ்நாட்டில் உள்ள கன்னடர்களுக்கு சிறு பாதிப்பைக் கூட தமிழர்கள் விளைவிக்கவில்லை. அவ்வளவு பண்போடு கடந்த காலங்களில் நடந்து கொண்டவர்கள் தமிழர்கள்" என வைகோ தெரிவித்தார். "இந்த விவகாரத்தை இத்தோடு அவர்கள் நிறுத்தி கொள்வது தான் நல்லது என நான் கருதுகின்றேன். உயர் நீதிமன்றம் , உச்ச நீதிமன்றம் என யார் சொன்னால் என்ன? தமிழ் தான் பழமையான மொழி" என்றும் கூறினார்.
மதுரை முருகன் மாநட்டில் மதத்தை வைத்து அரசியல் நடத்த இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன என குற்றம்சாட்டிய வைகோ, தமிழ்நாட்டில் எப்படி தமிழ் உணர்வு எழுந்ததோ? அது போல தற்போது கேரளத்தில், கர்நாடகாவில், மராட்டியத்தில், வங்காளத்தில், பஞ்சாபில் என இந்தி பேசாத மாநிலங்களில் மொழி உணர்வு ஏற்பட்டிருப்பது நல்ல திருப்பம் எனவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி பற்றி பேசிய வைகோ, "அதிமுக ஆட்சியில் ஏராளமான தவறுகள் நடந்தன. அலங்கோலமான நிர்வாகம் நடந்தது. இதனால்
மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்கள் பாதிக்கப்பட்ட போது அதிமுக எதுவுமே செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி தற்போது
எதிர் வரிசையில் இருப்பதால், அவர் தனக்கு கற்பனையாக தோன்றியதை எல்லாம் பேசுகிறார். அவர் பேசுவதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை" எனவும் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ஏற்பட்டிருப்பது உட்கட்சி பிரச்சனை, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வருவதும், சமாதானம் ஏற்படுவதும் அவர்களின் உட்கட்சி பிரச்சனை எனவும், அது குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்தார். இந்துத்துவா சக்திகளால் திராவிட இயக்கங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை தகர்க்க, நம்முடைய ஆதரவை திமுகவிற்கு கொடுப்பது தான் ஆபத்துக்களை தடுப்பதற்கு வழி என முடிவெடுத்து இருக்கிறோம். திமுகவுடனான கூட்டணி என்ற அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்காலத்திலும் ஏற்படாது என்றும் வைகோ தெரிவித்தார். மேலும் தவெக பற்றிய கேள்விக்கு அந்த கட்சி பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.