சென்னை: வடபழனியில் 13 வயது சிறுவன் சட்டவிரோதமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கிய பாதசாரி முதியவரும், ஆட்டோ ஓட்டுநரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில், சாலிகிராமம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் மகாலிங்கம் (69) சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தை நிகழ்த்தியது வடபழனி பகுதியைச் சேர்ந்த ஷாம் என்பவரின் 13 வயது மகனாவார். ஏப்ரல் 7 அன்று இரவு, குமரன் நகர் 7வது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் கார் சாவியை மகனிடம் கொடுத்து, அதன் மீது கவர் போட்டுவிட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவன் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் மெயின் ரோடு வழியாக அதிவேகமாக பறந்து சென்றுள்ளார்.
தனது நண்பருடன் ஒரு ரவுண்ட் சுற்றி வருவதற்காக சாலையில் மின்னல் வேகத்தில் பறந்த கார், வடபழனி குமரன் நகர் 5-ஆவது குறுக்கு தெரு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மற்றும் சாலையில் நடந்துசென்ற முதியவர் மீது அதிவேகமாக சென்று மோதி விபத்துக்குள்ளானது.
இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் காரில் இருந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொண்டு விபத்துக்குள்ளான காரை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க |
சிறுவன் உள்பட கார் ஓட்ட அனுமதி கொடுத்த அவரது தந்தை மீது அலட்சியமாக செயல்படுதல் உள்ளிட்ட மோட்டார் வாகன சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், படுகாயம் அடைந்து சிகிச்சைப்பெற்று வந்த முதியவர் உயிரிழந்ததால், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற ஒரு சட்டப் பிரிவின் கீழும் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.