சென்னை:சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் ஓராண்டு வெட்டியெடுத்த கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்குவாரிகளின் உரிமதாரர்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. எனவே, சுற்றுசூழல் ஒப்புதல் பெறாமல் 2016ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான ஓராண்டு காலத்தில் கல்குவாரிகளில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்தும்படி, குவாரி உரிமதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
தமிழ்நாட்டில் குவாரி உரிமம் பெற்றிருந்த 82 பேர் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, "கல்குவாரிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் கல் குவாரிகள் வணிகம் செய்தது சட்ட விரோதம்.
இதையும் படிங்க: மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதம், தொகுதி மறுவரையறை தற்செயல் அல்ல-வாசற்படி வரை வந்த ஆபத்து என மு.க.ஸ்டாலின் அச்சம்
எனவே, கல்குவாரிகளில் அரசு குறிப்பிட்டுள்ள ஒரு ஆண்டில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களின் மதிப்பில் நூறு சதவீத தொகையை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, இழப்பீட்டுத் தொகையை செலுத்தும் படி கல்குவாரி உரிமதாரர்களுக்கு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்.
அதே நேரத்தில், குவாரி உரிமதாரர்கள் ஏற்கனவே அரசுக்கு செலுத்தியுள்ள கட்டணத்தை கழித்து விட்டு மீதத் தொகையை இழப்பீடாக செலுத்தினால் போதுமானது. கட்டணம் செலுத்த வேண்டிய கல்குவாரி உரிமதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் மூன்று வாரங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதே போல அரசின் கடிதம் கிடைத்த இரண்டு மாதங்களுக்குள் கல்குவாரி உரிமதாரர்கள் இழப்பீட்டுத் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும்,"என உத்தரவிட்டார். மேலும் தமிழ்நாடு அரசை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை முடித்து வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.