சென்னை: 2 நாட்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்தார். இன்று அவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்றார். அங்கு தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து, அவரது தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினார். அப்போது அவர் குமரி அனந்தன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்திற்கு அமித் ஷா சென்றார். அங்கு அவருடன் சுமார் 1.30 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
மேடையில் திடீரென மாற்றப்பட்ட எல்இடி பேனர்!
முன்னதாக சென்னை நட்சத்திர ஹோட்டலில் அமித் ஷா செய்தியாளர்களை சந்திப்பதற்காக அமைக்கப்பட்ட மேடையின் பின்புறம், தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகம் அடங்கிய பேனர் எல்இடி திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த பேனர் திடீரென அகற்றப்பட்டு அதற்கு பதில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு என்ற பெயரில் பேனர் ஒளிர செய்யப்பட்டது. இந்த பேனரில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றன.
தள்ளிப் போன செய்தியாளர் சந்திப்பு!
இன்று நண்பகல்12 மணிக்கு அமித் ஷா செய்தியாளர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது தள்ளிக் கொண்டே போனது. பின்னர் மாலை 5 மணி அளவில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அமித் ஷா தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து அவரை சந்தித்தனர். இதன் பின்னர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருடன் மேடையில், எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தனர்.
அமித் ஷா செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர்கள் சந்திப்பில் அமித் ஷா கூறியதாவது:
"உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல தகவலை தெரிவிக்க விரும்புகிறோம். பாஜக மற்றும் அதிமுக இடையே தேர்தல் கூட்டணி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் இணைந்து போட்டியிடுவோம். தேசிய அளவில் கூட்டணிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், தமிழ்நாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தலைமை வகிப்பார்கள். தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை.
1998-ம் ஆண்டு பாஜக, அதிமுக இடையே கூட்டணி இருந்தது. ஒரு நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி 39-க்கு 30 தொகுதிகளில் அமோகமாக வெற்றி பெற்றது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி அமையும்" என்றார்..
அப்போது செய்தியாளர்கள், கூட்டணி ஆட்சி என்றால் யார் தலைமை? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமித் ஷா, "தமிழ்நாட்டில் நாங்கள் இணைந்து தான் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம். அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் தலைமை வகிப்பார்" என்றார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க பாஜக வலியுறுத்துமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடப் போவதில்லை. மற்றபடி, தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் கூடி உரிய முடிவு எடுப்போம். இந்த கூட்டணி அமைந்ததில் பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் நல்லது. யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பின்னர் பேசி முடிவு எடுப்போம்" என்று அமித் ஷா பதில் அளித்தார்.
மேலும் பேசிய அவர், "ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளை மறைக்கவே, சனாதனம், மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றை திமுகவினர் எழுப்புகின்றனர். திமுகவின் ஊழல்கள், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், தலித்துகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வனகொடுமை சம்பவங்கள் போன்றவற்றை வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் முன் வைத்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம்.
டாஸ்மார்க்கில் ஊழல், மணல் கொள்ளை, மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல், போக்குவரத்துத் துறையில் ஊழல் போன்ற அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் வரும் தேர்தலில் திமுக பதில் சொல்லியாக வேண்டும்" என்றார்.
மேலும், நீட் தேர்வுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமித் ஷா, "மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை திமுக பயன்படுத்தி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக குறைந்தபட்ச பொது செயல் திட்டம் உருவாக்கப்படும். அதன் பிறகு தான் தேர்தல் வரும். அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை முன் வைத்து வரும் தேர்தலில் திமுகவை எதிர்கொள்வோம்" என்றும் அமித் ஷா பதில் அளித்தார்.
தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது?
தமிழ் தொடர்பாக பேசிய அமித் ஷா, "தமிழையும், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பாஜக எப்போதும் கவுரவமாகவே நடத்துகிறது. அதனால் தான் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் செங்கோலை நிறுவினோம். ஆனால், திமுக இதனை எதிர்த்தது. மோடி ஆட்சியில் தான் காசியில் தமிழ் சங்கமம் நடத்தப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பு, கேலோ இந்தியா போட்டிகளில் சேர்க்கப்பட்டது. திருக்குறளை உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறோம். இதுவரை 63 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டுள்ளது. பாரதியின் அனைத்து நூல்களையும் மோடி வெளியிட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது என்று மக்களிடம் சொல்ல முடியுமா? அவர்கள் தமிழுக்காக செய்ததை பட்டியலிட முடியுமா? பாஜக ஆட்சி நடத்தும் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் அந்தந்த மாநில தாய்மொழியில் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தாய் மொழியான தமிழில் வழங்க வேண்டும் என்று நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக கூறி வருகிறோம். திமுக இதுவரை அதனை செய்யவில்லை. பாஜக - அதிமுக இடையே வலுவான கூட்டணி அமைவதற்காக தான் இந்த காலதாமதம் ஆனது" என்று அமித் ஷா கூறினார்.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் அதிமுக மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.