சிவகங்கை: தனியார் தோப்பு ஒன்றில் ஆடு மற்றும் கோழிகளை திருட வந்ததாகக் கூறி, சகோதரர்களை அப்பகுதி மக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன் (30) மற்றும் சிவசங்கரன் (எ) விக்னேஷ் (25). மணிகண்டன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். விக்னேஷ் கல்லம்பட்டியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 2) நள்ளிரவு மதகுபட்டி அருகே அழகமா நகரி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில் ஆட்கள் நடமாடுவது போல் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் சந்தேகமடைந்த அந்த பகுதியில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, தோப்பிற்குள் மணிகண்டனும், விக்னேஷூம் இருந்துள்ளனர்.
நள்ளிரவு சகோதரர்கள் இருவரும் தோப்பிற்கு ஆடு மற்றும் கோழிகளை திருட வந்ததாக நினைத்த கிராம மக்கள் கட்டை மற்றும் கைகளால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். அப்போது தப்பி ஓட முயன்ற இருவரும் பலமாக தாக்கப்பட்டதால், ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். மயக்கத்தில் கிடந்த சகோதரர்கள் மணிகண்டன் மற்றும் விக்னேஷை ஆம்புலன்ஸில் ஏற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சகோதரர்கள் இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மதகுபட்டி காவல் துறையினர் மணிகண்டன் மற்றும் விக்னேஷின் உடல்களை, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மணிகண்டனும், விக்னேஷும் ஆடு மற்றும் கோழிகளை திருட வந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், முன் பகை காரணமாக இந்த இரட்டைக் கொலை சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது உண்மையிலேயே திருட வந்தது தான் காரணமா? என மதகுபட்டி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.