தென்காசி: விளையாடும்போது கீழே கண்டெடுத்த 100 ரூபாயை, ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்கள் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கடையம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் நேற்று (ஜூன் 22) ஞாயிற்றுக்கிழமை என்பதால், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, தருமர் என்பவரது மகன் அபிமன்யு மற்றும் கருப்பசாமி என்பவரது மகன் பாலாஜி ஆகிய இருவரும் மைதானத்தில் 100 ரூபாய் இருப்பதை பார்த்துள்ளனர்.
அந்த பணத்தை கையில் எடுத்த சிறுவர்கள் என்ன யோசித்தார்கள் என்று தெரியவில்லை, விறுவிறுவென அருகிலிருந்த கடையம் காவல் நிலையத்தை நோக்கி சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரியைப் பார்த்து, “சார் இந்த நூறு ரூபாய் கீழே கிடந்தது. இதனை தொலைத்த நபர்களிடம் கொடுத்துவிடுங்கள்" என குழந்தைத்தனமாக மொழியில் தெரிவித்துள்ளனர். அப்போது, சிறுவர்களின் சத்தம் கேட்டு வந்த காவல் ஆய்வாளர் சுரேஷ், "அவர்களிடம் உங்களின் பெயர் என்ன? என்ன படிக்கிறீர்கள்? உங்களுக்கு இந்த பழக்கத்தை யார் சொல்லிக் கொடுத்தது?" என கனிவாகக் கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சிறுவர்கள், “மற்ற நபர்களின் பொருளுக்கோ, பணத்திற்கோ ஒரு பொழுதும் ஆசைப்படக்கூடாது, பணம் போன்ற எதாவது பொருள் கீழே கிடப்பதைக் கண்டால், அதனை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என எங்களது அப்பாவும், ஆசிரியர்களும் கற்றுக் கொடுத்துள்ளனர். அதனால்தான் 100 ரூபாயாக இருந்தாலும் காவல்நிலையம் கொண்டு வந்தோம்,” எனத் தெரிவித்துள்ளனர்.
அப்போது சிறுவர்களின் நேர்மையைக் கண்டு வியந்த காவல் ஆய்வாளர் சுரேஷ், அவர்களுக்கு தலா ரூ.100 கொடுத்து இந்த பணத்திற்கு சாக்லேட் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த பணத்தை உரிய நபரிடம் சேர்த்துவிடுகிறேன் என அரவணைத்து, பாராட்டி அனுப்பி வைத்தார்.
பொதுவாக, சிறுவர்கள் விளையாட்டுத் தனத்துடன் நடந்து கொள்வார்கள், சாலையில் அல்லது வீட்டில் கீழே பணம் கிடைத்தால், அதனை எடுத்துக் கொண்டு நேராக கடைக்கு சென்று, மிட்டாய் போன்று தங்களுக்கு பிடித்ததை வாங்கி சாப்பிடும் பழக்கத்தைப் பார்த்திருப்போம். ஆனால், அபிமன்யு மற்றும் பாலாஜி இருவரும் ரோட்டில் கிடைத்த நூறு ரூபாயை உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் காவல்நிலையம் படியேறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த சிறுவர்கள் பேசும் வீடியோவை போலீசார் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள், எண்ணம்போல்தான் வாழ்க்கை, நூறு ரூபாயாக இருந்தால் என்ன? லட்சமாக இருந்தால் என்ன பணம் பணம்தானே, அதனை பொறுப்போடும், நேர்மையோடும் ஒப்படைக்க ஒரு மனசு வேண்டும் அல்லவா? என பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.