ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பாட்டி மற்றும் பேரனை கொலை செய்த சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கனரக வாகன ஓட்டுநர் மற்றும் ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருமணம் மீறிய உறவை வெளியே பரப்பியதால், ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி, பேரனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாசனூரைச் சேர்ந்தவர் மாதப்பா மற்றும் தொட்டம்மா தம்பதி். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அதே கிராமத்தில் உள்ள பக்கத்து தெருவில், தொட்டம்மாவின் தாயார் சிக்கம்மா வசித்து வருவதால், இவர்களது மகன் ராகவன் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு தனது பாட்டி சிக்கம்மா வீட்டுக்குச் சென்று ராகவன் உறங்கியுள்ளார். ஆனால், மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிக்கம்மாவின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். பாட்டியும், பேரனும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரிய வந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் விரைந்து வந்த தாளவாடி காவல் துறையினர், உயிரிழந்த நபர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவத்தின் கொலையாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. மேலும், தொட்டகாசனூர், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது, ஜேசிபி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நாகேஷ் என்பவர் நடந்து செல்லும் காட்சிப் பதிவாகியிருந்துள்ளது.
இதையும் படிங்க: நெல்லை பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு: புத்தகப் பையை சோதனை செய்து அனுமதிக்கும் நிர்வாகம்! |
அந்த காட்சிகளின் அடிப்படையில், அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, பாட்டி மற்றும் பேரன் இருவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், மாதப்பாவின் அண்ணன் மனைவி பாக்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர், தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அதில், பாக்யா கணவரை இழந்து தனியாக வசித்து வருவதாகவும், அப்போது நாகேஷூக்கும் பாக்யாவுக்கும் இடையே திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டதாகவும், அதனை சிக்கம்மா பொதுவெளியில் பரப்பியதால், திட்டமிட்டு கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் சிறுவனும் அங்கே இருந்ததால், அவரையும் கொலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், பின்னர் சிக்கம்மாவின் வீட்டிலிருந்த 30 கிராம் தங்க சங்கிலியையும் திருடிச் சென்றதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த தங்க நகை மற்றும் ஜேசிபியையும் பறிமுதல் செய்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.