வேலூர்: யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீட்டின் மீது வீச முயன்ற இருவரை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் மார்த்தாண்டன். இவருடன் ரித்தீஷ் என்பவர் வாக்குவாத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ரித்திஷ் நேற்று (மே 3) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ரித்தீஷ் கைது செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் நரேஷ் மற்றும் விக்னேஷ், மார்த்தாண்டன் மீது வெடிகுண்டு வீசுவதற்காக வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு செய்துள்ளனர். இதற்காக பொருள்கள் வாங்கிய இடங்களில் இருந்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், அங்கு சென்ற லத்தேரி காவல் துறையினர், நரேஷ், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு, அவர்கள் தயார் செய்து வைத்திருந்த மூன்று நாட்டு வெடிகுண்டுகளையும், செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த இரண்டு மாதங்களாக தாங்கள் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
விசாரணையில், “வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான வெடி பொருள்களை வீட்டில் அருகே கிடைத்த பட்டாசுகள் மற்றும் அதை விற்பனை செய்யும் கடைகளில் இருந்து வாங்கியுள்ளனர். பின்னர் அதன் செய்முறை விளக்கங்களை யூடியூபில் பார்த்து வெடிகுண்டை தயாரித்துள்ளனர்,” என்று பிடிபட்டவர்கள் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க |
ரித்திஷும், அவரது நண்பர் நரேஷும், 2023-இல் நடந்த வெல்டிங் மேஸ்திரி குணசேகரன் கொலையில் சம்பந்தப்பட்டு சிறை சென்றுள்ளனர். தற்போது பிணையில் வெளியே உள்ளனர். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், ரித்தீஷ் மற்றும் அவரது நண்பர் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்த்தாண்டன் கோரிக்கை வைத்துள்ளார்.
டிஜிட்டல் மோகம் அதிகரித்து வரும் காலகட்டத்தில், யூடியூப் போன்ற தளங்களில் வீடியோக்களை பார்த்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.