சேலம்: சேலம் அருகே சின்னகவுண்டாபுரம் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் பகுதியை அடுத்த சின்னகவுண்டாபுரம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமானத் தொழிலாளி ராஜேந்திரன் (35). அவரது மனைவி சந்தியா(28). இவர்களது மூத்த மகன் தர்ஷன் (8). இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும் இவரது தம்பி விஷால் (7) அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இருவரும் அதே பகுதியில் உள்ள சந்தனப்புடையார் ஏரிக்கு நேற்று மாலை நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஏரியில் உள்ள அதிக நீர் நிரம்பிய பள்ளத்தில் விஷால் திடீரென தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை காப்பாற்ற சிறுவன் தர்ஷனும் முயன்றுள்ளார். ஆனால், அவரும் ஏரி பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து உடன் இருந்த சிறுவர்கள் ஓடி வந்து அப் பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அப் பகுதி மக்கள் விரைந்து சென்று பார்த்த போது, ஏரி பள்ளத்தில் குதித்து சிறுவர்களை தேடினர். ஆனால், சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதையும் படிங்க: சிங்கிபுரம் ஜல்லிக்கட்டு: துள்ளிக் குதித்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்!
பின் உயிரிழந்த நிலையில் சிறுவர்கள் இருவரது சடலங்களையும் அப் பகுதி மீட்டு வந்தனர். இதனைப் பார்த்து சிறுவர்களது பெற்றோரும், உறவினர்களும் மற்றும் அப் பகுதி மக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் அப்பகுதிக்கு சென்று, சிறுவர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள், மீன் பிடிக்கச் சென்ற நலிையில் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்