சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் 'அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்' என பதிவிட்டிருந்தார். சித்திரை ஒன்றாம் ஆம் தேதி என்பது தமிழ்ப்புத்தாண்டு எனக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என இல்லாமல் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, தமிழ்ப் புத்தாண்டு சித்தரை ஒன்றா? அல்லது தை ஒன்றா? என்ற பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில், விஜய்யின் பதிவு பேசு பொருளாக மாறியுள்ளது.
அதாவது, 2008-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என மசோதா தாக்கல் செய்தது. அதன் பின்னர் 2011-இல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு சித்திரை மாதம் தான் தமிழ்ப்புத்தாண்டு தொடங்குவதாக அறிவித்தது. அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் சித்திரை ஒன்று தான் தமிழ்ப் புத்தாண்டாக இருந்து வந்தது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறைத் தேதிகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அவற்றில் தை ஒன்றாம் தேதியை பொங்கல் என்றும், சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக அரசு 1972 ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் ஆண்டினை அரசுப் பயன்பாட்டிலும், ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் 2008 ஆம் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் எனச் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்தது.
தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு என 2008-ல் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரித்தன. 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சித்திரை மாதம் தான் தமிழ்ப்புத்தாண்டு தொடங்குவதாக அறிவித்தது.
இதுகுறித்த மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ஜெயலலிதா, “தமிழ்ப்புத்தாண்டு, தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சித்திரையில் தொடங்குவதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. ஆகவே இனி சித்திரை ஒன்றாம் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு,” எனத் தெரிவித்தார்.
ஆனால், அப்போது கருணாநிதி “திமுகவினரைப் பொருத்தவரை, தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் நாள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் தை ஒன்றாம் தேதியே தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்படும்,” என்றார். அப்போது, இதை சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகள் எதிர்த்தன. தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி இருந்ததால், எந்த மாற்றமும் இன்றி சித்திரை ஒன்றாம் தேதியே தமிழ்ப் புத்தாண்டாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: "இனிய நண்பர் விஜயகாந்த்.." தமிழில் புகழ்ந்த பிரதமர் மோடி; பாஜக கூட்டணியில் இணையும் தேமுதிக? |
2018 ஏப்ரல் 14-ல் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். அப்போது “தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு; திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாளில் கொண்டாடப்படும்” என உறுதிப்படத் தெரிவித்தார். பின்னர் 2021ஆம் ஆண்டிலும் தை முதல் நாளன்று ஸ்டாலின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து என்று தான் அறிக்கை விடுத்தார்.

தற்போது, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழ்ப்புத்தாண்டு மாற்றப்பட வாய்ப்பிருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இப்போது தமிழ்நாடு அரசின் விடுமுறைப் பட்டியலில் அந்த மாதிரியான எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இன்று திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எவரும் சித்திரை முதல் நாளுக்கு தமிழ்ப் புத்தாண்டு என வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை. அதிமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்றே பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் "அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்" எனத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது, திமுகவைப் போலவே சித்திரை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு இல்லை என்றும், அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் போலத் தெரிகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.