சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா காலை 10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தலைவர் விஜய் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்தார். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விழா தொடங்கியது.
இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 75 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கி தவெக தலைவர் விஜய் கெளரவிக்கிறார்.
இந்தாண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். கடந்த 30 தேதி நடைபெற்ற முதற்கட்ட விருது வழங்கும் விழாவில், 18 மாவட்டங்களை சேர்ந்த 88 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விருதுகளை பெற்றனர்.
இந்த விழாவில், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என 2,500 பேர் பங்கேற்றுள்ளனர்.
முதற்கட்ட நிகழ்வில் பேசிய விஜய், “அடுத்த முறையும் பேசமாட்டேன்; ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பேசுவது உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, இன்றைய பேச்சையே அனைத்து மாணவர்களும் எனது அறிவுரையாக எடுத்துக்கொள்ளுங்கள்,” என்று கூறியிருந்தார்.
அந்த வகையில், இன்று விழா மேடை ஏறிய உடனே மாணவர்களை அழைத்து விருதுகள் மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கி விஜய் கெளரவித்தார்.
இதையும் படிங்க |
குறிப்பிடும்படி, கடந்த முறை பேசும்போது, தந்தை பெரியார் அவர்கள் மீதே சாதி சாயம் பூசும் வேலை நடக்கிறது எனவும், ஒன்றிய அரசுப் பணித் தேர்வில் இதுபோன்று சாதி தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது என்று ஒன்றிய அரசை வம்புக்கு இழுத்தார்.
மேலும், நீட் போன்ற ஒரு தேர்வில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்தாமல், பிடித்த பிறத் துறைகளிலும் மேலோங்க புதிய தொழில்நுட்பங்களை கற்றுகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.